நாமக்கல்லில், வாகன ஓட்டிகளிடம் கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் வசூல் வேட்டை நடத்திய சிறப்பு எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உள்கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு காவல்நிலையங்களில் சிறப்பு எஸ்.ஐ. ஆக பணியாற்றியவர் பழனிசாமி. இவர், வாகனத் தணிக்கையின்போது கட்டாய வசூலில் ஈடுபட்டதாக புகார்கள் கிளம்பின. அதன்பேரில் அவரை, கொல்லிமலையில் உள்ள வாழவந்திநாடு காவல்நிலையத்திற்கு இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டர்.
இந்த நிலையில், மார்ச் 10- ஆம் தேதி சேந்தமங்கலம் காவல்நிலையத்திற்கு எஸ்.ஐ. பழனிசாமி இடமாறுதலில் வந்துள்ளார். அப்போது அவர் கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி மாலைப்பாதை நுழைவு வாயில் முன்பு நின்று கொண்டு, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ஓட்டிகளிடம் வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க 100 ரூபாய் வீதம் கட்டாயப்படுத்தி வசூலித்துள்ளார்.
பணம் கொடுக்காத வாகன ஓட்டிகளை அங்கிருந்து செல்ல விடாமல் வாகனத்தின் சாவியைப் பிடுங்கி வைத்துக்கொண்டு தகராறு செய்துள்ளார். பலரை கண்ணியக் குறைவாகவும் திட்டியுள்ளார். இதை வாகன ஓட்டிகள் செல்போன் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ பதிவுகள், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர், பழனிசாமியை மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். வசூல் வேட்டை புகாரின்பேரில் ஒரே எஸ்.ஐ. குறுகிய காலத்தில் இரண்டாவது முறையாக இடமாறுதலுக்கு உள்ளான சம்பவம் நாமக்கல் மாவட்ட காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.