சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 8,953 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரஸால் 2.19 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 166 பேரைப் பாதித்துள்ளது. மேலும், கர்நாடகா, டெல்லி மற்றும் மும்பையில் தலா ஒருவர் என மூன்று பேர் இதுவரை கரோனாவால் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 15 பேருக்கு மேல் குணமாகிவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மக்கள் கூடும் இடங்கள் கரோனா அதிகம் பரவும் அச்சுறுத்தல் இருப்பதால் இந்தியா முழுவழுதும் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்கள், கோவில்கள் என அனைத்தும் மூடப்பட்டது. ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குப் பக்தர்கள் யாரும் வரவேண்டாம் எனக் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உட்பட பல கோவில்கள் மூடப்பட்டன. இந்நிலையில், சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் போர்டுக்கு சொந்தமான பெருமாள் கோவிலில் காரோனாவில் இருந்து உலக மக்களைப் பாதுகாக்க வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில், தேவஸ்தான போர்டு சார்பில் சேகர் ரெட்டி கலந்துகொண்டார்.