பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால், இந்த வழக்கை சிபிஐ'க்கு மாற்றக் கோரி, சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் எஸ்.பி.-யான கே.ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த புகார் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை எடுத்து, விசாரணையை கண்காணித்து வருவதாகவும், சிறப்பு டிஜிபி-க்கு எதிரான விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்து வருவதாகவும் தெரிவித்தார். அந்த வழக்கு ஏப்ரல் 30ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில் பெண் எஸ்பி அளித்த புகாரில் விசாரணை மேற்கொண்ட உட்புகார் விசாரணை குழு, அதன் அறிக்கையை அரசிடம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது சிறப்பு டிஜிபி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உட்புகார் விசாரணைக் குழுவின் விசாரணைக்கும், சிபிசிஐடி விசாரணைக்கும் நேரில் ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரம் தொடர்பாக நடைபெறும் விசாரணையை தனி நீதிபதி கண்காணித்து வருவதால், மேற்கொண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கு அவசியம் இல்லை எனக் கூறி மனுவை முடித்து வைத்தார்.
மேலும், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சிறப்பு டிஜிபிக்கு மீதான விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். அதேபோல நியாயமாகவும் நேர்மையாகவும் விசாரணை நடைபெற வேண்டுமென தெரிவித்துள்ள நீதிபதிகள், ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.