5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த மாலை ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு எடுக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளையில் ஒரு மணி நேரம் ஒதுக்கி சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும். 30 மதிப்பெண்கள் முதல் இரண்டு பருவங்களில் மாதிரி வினாத்தாள் தயார் செய்து தேர்வு நடத்த வேண்டும். திங்கள்-தமிழ், செவ்வாய்-ஆங்கிலம்,புதன்-கணிதம், வியாழன்-அறிவியல்,வெள்ளி- சமூக அறிவியல் என சிறு தேர்வு நடத்தவேண்டும்.பள்ளி நேரங்களில் மூன்றாம் பருவ பாட பகுதிகளிலிருந்து சிறு தேர்வு நடத்த வேண்டும் என்றும் அறிக்கை விடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அறிக்கை வெளியான உடனே இந்தச் சுற்றறிக்கை குறித்து விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் சிறப்பு வகுப்பு இல்லை என தொடக்கக் கல்வி இயக்குனரகம் விளக்கமளித்துள்ளது. 2019 செப்டம்பர் 22 வெளியான சுற்றறிக்கை அடிப்படையில் ஈரோடு மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை விட்டுள்ளார் எனவும், தமிழகத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் சிறப்பு வகுப்பு இல்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.