சென்னை அண்ணாநகர், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் சில கடைகளில் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக காவல் நிலையத்திற்கு வந்த புகாரை அடுத்து இதை பற்றி விசாரிக்க அண்ணாநகர் காவல் ஆணையர் சுதாகர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வந்தது.
அந்த வழக்கில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அப்பகுதியில் பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்த மாற்றுத்திறனாளி கொள்ளையன் சிக்கினான். கொள்ளை அடித்து முடித்த பின்னர் மெட்ரோ ரயில் நிலையத்தை நோக்கி கொள்ளையன் சென்றது பதிவாகி இருந்தது. அண்ணாநகர் மெட்ரோ ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர் அப்போது அதே நபர் குறிப்பிட்ட நேரத்திற்கு அங்கு வந்து செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து மாறுவேடத்தில் அங்கு காத்திருந்த தனிப்படையினர் மெட்ரோ ரயிலில் வந்திறங்கிய அந்த நபரை பிடித்தனர்.
விசாரணையில் அவன் அரியலூர் பழமலைநாதபுரத்தை சேர்ந்த சிவா என்பதும், வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. திருமங்கலத்தில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் அவன் சமையலர் ஆக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. காலையிலிருந்து மாலை வரை சமையல் மாஸ்டராக வேலை செய்யும் சிவா மாலையில் திருடனாக மாறி கடைகளை உடைத்து பணத்தை மட்டுமே கொள்ளையடித்தான் என்கின்றனர் அண்ணாநகர் காவல் துறையினர்.
அதிகாலை 4 மணிக்கு கொள்ளையடிக்கும் பழக்கத்தை கொண்ட சிவா கொள்ளையடித்த பின்னர் மெட்ரோ ரயிலில் ஏறி வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று விடுவான் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான மாதாந்திர பாசும் அவரிடம் உண்டு. இப்படி கொள்ளையடித்த பணத்தைக்குக் கொண்டு சிட்டி சென்டர், ஃபீனிக்ஸ் மால், போரம் மால் ஆகிய வணிக வளாகங்களில் விலை உயர்ந்த ஆடைகளை வாங்குவது விலை உயர்ந்த உணவுகளை சாப்பிடுவது என உல்லாசமாக செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது.
சிவா மீது திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் பல உள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியே வந்த சிவா கடந்த மூன்று வருடங்களில் பல இடங்களில் இதுபோன்ற கைவரிசை காட்டி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.