சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைப் புரட்டிபோட்ட மழை, அடுத்து தனது உக்கிரத்தை தென்மாவட்டங்களில் வெளிப்படுத்தியிருக்கிறது. வறட்சி, செழிப்பான பகுதி என்று வஞ்சகம் வைக்காமல் நீக்கமற டிச 16,17 ஆகிய நாட்களில் விடிய விடிய கொட்டித் தீர்த்ததன் விளைவு தென்மாவட்ட மக்களை வீட்டைவிட்டு வெளியே வர விடாத அளவுக்கு முடக்கிப் போட்டு இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கச் செய்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நேற்று சுழல் காற்றானது மணிக்கு 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும் என்றும் அதன் காரணமாகத் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் மேற்படி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தின் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 400 விசைப்படகு மீனவர்கள், சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. அனைத்துப் படகுகளும் கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன.
24 மணி நேரம் நான்ஸ்டாப்பாகக் கொட்டித் தீர்த்த மழை காரணமாக, மாவட்டங்களின் அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தன. அடைமழையினால் பாபநாசம் சேர்வலாறு அணைக்குத் தொடர்ந்து அதிக நீர்வரத்து காரணமாக தாமிரபரணி ஆற்றில் 47 ஆயிரம் கன அடி நீர் (சுமார் 2 டி.எம்.சி) திறக்கப்பட்டுள்ளது. மேலும் பலத்த மழை காரணமாக ஆங்காங்கே இணையும் நீரால் வெள்ளப் பெருக்கு அதிகரிக்கும். இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மற்றும் தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி ஆகியோர் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பாக இருக்குமாறு கரையோர மக்கள் 2.18 லட்சம் பேருக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டன. ஆனால் அடைமழை மற்றும் பிற அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மொத்த நீருமாகச் சேர்ந்து சுமார் 1 லட்சம் கன அடி நீராக (சுமார் 6 டி.எம்.சி.) அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் கைலாசபுரம், வெள்ளங்கோயில் மற்றும் வழியோரப் பகுதியான செய்துங்கநல்லூர் போன்ற பகுதிகளிலும் தாமிரபரணியின் வெள்ளம் புகுந்து வெள்ளக்காடானது.
தூத்துக்குடி விமான நிலையம் வெள்ளத்தால் சூழப்பட்டதால் மீட்புப் பணிக்காக கொண்டுவரப்பட்ட ஹெலிகாப்டர்கள் அங்கு நிறுத்தப்பட முடியாத நிலையானது. அதனால் அந்த ஹெலிகாப்டர்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் மீட்புப் பணிக்காக நிறுத்தப்பட்ட கஜாய் போர்க் கப்பலின் தளத்தில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டன.
தொடர்மழையால் தூத்துக்குடியின் திருச்செந்தூர் ரோடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. நெல்லை சந்திப்பு பஸ் நிலையச் சுற்றுப்புறச் சாலைகள், புதிய பஸ் நிலையம், மார்க்கெட் பகுதிகளில் வெள்ள நீர் நிறைந்து காணப்பட்டன. இதனால் சாலைகளில் சென்ற பேருந்துகள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை. நெல்லை டவுனில் பெரிய தெருவில் மழைநீர் முழங்கால் அளவுக்குச் சென்றதால் அந்த ஏரியாவாசிகளால் வெளியே வரமுடியாத நிலை. மேலும் அங்குள்ள இரட்டைப் பிள்ளையார் கோவிலுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கேம்பலாபாத் நகரின் 3வது ப்ளாக் மற்றும் அதன் தொடர்ச்சியான தெருவில் தாமிரபரணி வெள்ளம் புகுந்துவிட மார்பளவு தண்ணீரில் தத்தளித்த மக்கள் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்தனர். போன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் தங்களின் நிலையை அவர்கள் வெளிப்படுத்த முடியாமல் உதவி கேட்டுத் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பசியால் வாடுவதாகவும் முகநூல் போன்ற சோசியல் மீடியாக்களில் தங்களைக் காப்பாற்றுங்கள் என்று பதறியுள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுக்க குற்றாலம் நகரின் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டதால் குற்றாலம் டவுன்ஷிப் ஏரியா முடங்கியது. சீசனுக்காக வந்த ஐயப்ப பக்தர்கள் அருவியில் குளிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.
பாபநாசத்தின் மேலே உள்ள அகஸ்தியர் அருவியில் காட்டாற்று வெள்ளமாய் பாய்ந்ததால் தாமிரபரணியாறு பெருக்கெடுத்தது. ஊரெல்லாம் மழை கொட்டினாலும் தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் எரியா வறட்சியாகத்தானிருக்கும். ஆனால் கொட்டித் தீர்த்த இந்த மழையினால் சாத்தான்குளம் ஏரியாவில் தண்ணீர் வெள்ளமாய்த் திரண்டது. பஜார் மற்றும் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் இடுப்பளவு வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பாதுகாப்பாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். தென்மாவட்டத்தில் பெய்யும் வரலாறு காணாத கனமழை மக்களைத் திணற வைத்திருக்கிறது.