Skip to main content

மொட்டை பையனா சுத்துறியே...! கேவலமாக பேசிய தந்தையை கொன்ற மகன்!

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

Son arrested in father cases's

 

வாழப்பாடி அருகே தற்கொலை செய்துகொண்ட மனைவி பற்றியும், மனைவியை இழந்து மொட்டை பையனாக சுற்றித்திரிகிறாயே என்றும் தந்தையே கேவலமாகப் பேசியதால் ஆத்திரமடைந்த மகன், அவரை அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள பீமன்பாளையத்தைச் சேர்ந்தவர் துரைசாமி (50), விவசாயி. இவருடைய மனைவி செல்லம்மாள். இவர்களுக்கு மணிகண்டன் (27), மணிவண்ணன் (22) என இரு மகன்கள் உள்ளனர். 

 

இவர்களில் மணிகண்டன், லாரி ஓட்டுநராக உள்ளார். சில நாட்களுக்கு முன்பு, மத்தியப்பிரதேசத்திற்கு லாரி ஓட்டிச்சென்றுள்ளார். அவருடைய மகள் ரித்திகாவிற்கு நவ. 12ஆம் தேதியன்று மூன்றாவது பிறந்தநாள் வந்துள்ளது. தான் வெளிமாநிலத்திலிருந்து ஊர் திரும்பி வர தாமதமாகும் என்பதால், மகளின் பிறந்தநாள் விழாவைப் பெற்றோருடன் சேர்ந்து கேக் வெட்டிக் கொண்டாடுமாறு தனது மனைவி தனக்கொடியிடம் கூறியுள்ளார்.

 

அவரும் ரித்திகாவின் பிறந்தநாள் விழா ஏற்பாடுகளைச் செய்துவந்துள்ளார். இதையறிந்த மாமனார் துரைசாமி, மழை நேரத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாட வேண்டிய அவசியம் என்ன இருக்கு? என மருமகளிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. 

 

இதுகுறித்து தனக்கொடி, தனது கணவரிடம் செல்ஃபோன் மூலம் தொடர்புகொண்டு அழுது புலம்பியுள்ளார். என்னவென்று புரியாத அவர், தனது தம்பி மணிவண்ணனை அழைத்து, வீட்டில் அப்பா ஏதோ தகராறு செய்துகொண்டிருக்கிறார். அதை என்னவென்று விசாரித்துவிட்டு பேசும்படி கூறியிருக்கிறார். 

 

வெளியே சென்றிருந்த மணிவண்ணன், சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருடைய தந்தை துரைசாமி குடிபோதையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அண்ணன் மகளின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு ஏன் முட்டுக்கட்டை போடுகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அப்போது அவர் மணிவண்ணனை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். 

 

இதனால் ஆத்திரமடைந்த மணிவண்ணன், அங்கிருந்த மோட்டார் சைக்கிள் செயின் கவரை எடுத்து, தந்தையை சரமாரியாக தாக்கினார். இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் மணிவண்ணன் அங்கிருந்து சென்றுவிட்டார். 

 

ஏற்கனவே குடிபோதையில் இருந்ததால் துரைசாமியை வீட்டிலேயே படுக்க வைத்துள்ளனர். இந்நிலையில், நவ. 13ஆம் தேதி காலையில் எல்லோரும் எழுந்துவிட்ட நிலையில், துரைசாமி மட்டும் நீண்ட நேரமாகியும் எழாமல் இருந்தார். அவர் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. 

 

இதுகுறித்து உறவினர்கள் ஏத்தாப்பூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். காவல் ஆய்வாளர் கணேஷ்குமார் மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்து சென்று, சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 

இச்சம்பவம் தொடர்பாக மணிவண்ணனை கைதுசெய்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், ''எனது அண்ணன் மகளின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட என்னுடைய அப்பா எதிர்ப்பு தெரிவித்தார். அதைத் தட்டிக்கேட்டபோது, என் மனைவி மகாலட்சுமி தற்கொலை செய்துகொண்டதையும், நான் மொட்டையாக சுற்றித்திரிவதையும் கூறி ஏளனமாகவும் ஆபாசமாகவும் பேசினார். இதனால் ஆத்திரத்தில் அவரை மோட்டார் சைக்கிள் செயின் கவரால் தாக்கினேன். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார்'' என அவர் கூறியதாக தெரிவிக்கின்றனர். 

 

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர். இச்சம்பவம் பீமன்பாளையம் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்