
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெபி நட்டா 2 நாள் பயணமாக தமிழகம் வந்தடைந்தார். தமிழகம் வந்த அவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மதுரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
மதுரையின் பாஜகவின் பல்துறை வல்லுநர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெபி நட்டா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 95% பணிகள் நிறைவடைந்துள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1,264 கோடியும், தொற்று நோய் பிரிவுக்காக ரூ.134 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை இடங்களும் 100ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானம் முடிந்து, அதை பிரதமர் மோடி திறந்து வைப்பார்.
ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை நாட்டில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற ரூ.550 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உடன் மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேர்வு செய்த இடத்தை இன்று நேரில் பார்வையிட்டுள்ளார். அங்கு இன்னும் எந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கப்படாததை சுட்டிக் காட்டும்வகையில் புகைப்படங்களையும் ஒரு வீடியோ காட்சியையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் “மதுரை எய்ம்ஸ் குறித்து 95% பணிகள் நிறைவடைந்து விட்டதாக நட்டா சொன்னார். இது தான் அந்த பணிகள் நிறைவடைந்த பகுதி. இப்படி தான் அவர்கள் தமிழக மக்களை ஏமாற்றுகிறார்கள். இப்படித்தான் மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள். தமிழக மக்கள் ஒரு போதும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பாஜக மற்றும் நட்டா செய்த துரோகத்தை மறக்க மாட்டார்கள்” என கூறியுள்ளார்.
அது மட்டும் இன்றி தனது ட்விட்டர் பக்கத்தில், “95% பணிகள் நிறைவடைந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜெ.பி.நட்டாவிற்கு நன்றி. நானும் மதுரை எம்பி சு.வெங்கடேசனும் நிறைவடைந்த எய்ம்ஸ் மருத்துவமனையை தோப்பூர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேடினோம். எதையும் கண்டுபிடிக்கவில்லை. கட்டிடத்தை யாரோ திருடிச் சென்றுவிட்டனர்” என பதிவிட்டுள்ளார்.