தர்மபுரி மாவட்டம் தும்பல அள்ளி அகதிகள் முகாமில் 30 வருடங்களுக்கும் மேலாகப் பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த முகாமில் 825 பேர் 450 குடும்பங்களாக வசித்து வருகின்றனர். அதில் ஆண்கள் 333 பேரும், பெண்கள் 475 பேரும், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 70 பேரும் உள்ளனர்.
இந்த கரோனா சமயத்தில் அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட வெளியே செல்ல முடியாமல் மிகவும் கடினமான சூழ்நிலையைச் சந்தித்து வருகின்றனர் இப்பகுதி முகாமில் வசிக்கும் மக்கள். இப்படிப்பட்ட ஒரு சூழலில், தங்களுக்கு உதவுமாறு அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காணொளி மூலம் உதவி கோரியுள்ளார். அந்த காணொளியில் பேசியுள்ள அவர், “கரோனா நோய்த் தொற்றினால் இங்கு இரண்டு நபர்கள் இறந்துள்ளனர். அதே போல் இந்த முகாமை விட்டு வெளியே செல்ல முடியாமல் எல்லா இடங்களையும் அடைத்து வைத்திருக்கின்ற காரணத்தினால் வேலைக்காகவோ, வேறு எந்த தேவைக்காகவோ வெளியே செல்ல முடியாமல் கடும் அவதிகளுக்கு உள்ளாகி வருகின்றோம்.
அது மட்டுமில்லாமல் எங்களுக்கு உதவி செய்வதற்கும் யாரும் முன்வரவில்லை. அவசர தேவைக்காக மருத்துவமனைக்குக் கூட செல்ல முடியாமல் உள்ளேயே இருக்கும் எங்களுக்கு உதவி செய்ய வேண்டுகோள் விடுத்துக்கொள்கிறேன். இது மட்டுமில்லாமல், தமிழ்நாட்டில் 112 முகாம்கள் உள்ளன. அதில் தர்மபுரியில் மட்டும் 9 முகாம்கள் இருக்கின்றன. அவற்றுக்கும் தன்னார்வலர்கள் யாராவது முன்வந்து உதவிகள் செய்ய வேண்டும்” எனக் கூறினார்.