Skip to main content

'வியாசர்பாடியில் ஏதாவது ஒரு சாலைக்கு சுவாமி சகஜானந்தா பெயர் சூட்ட வேண்டும்' - இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை

Published on 01/05/2023 | Edited on 01/05/2023

 

வியாசர்பாடியில் உள்ள ஏதாவது ஒரு சாலைக்கு சுவாமி சகஜானந்தா பெயர் சூட்ட வேண்டும் என இளைஞர் காங்கிரஸ் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

விளிம்பு நிலை மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட சுவாமி சகஜானந்தாவின் 64 ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று அனுசரிக்கப்பட்டது. சுவாமி சகஜானந்தாவின் பேரனும், இளைஞர் காங்கிரஸ் ஆராய்ச்சித்துறை ஒருங்கிணைப்பாளருமான அமர்நாத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ்  முதன்மை பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன், திரைப்பட நடிகரும் சண்டை பயிற்சியாளருமான சாய் தீனா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சுவாமி சகஜானந்தாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வத்தாமன், ''ஏழை எளிய விளிம்பு நிலை மக்களின் கல்வி முன்னேற்றத்திற்குப் போராடிய சுவாமி சகஜானந்தா, 34 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக செயல்பட்டு தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர். வடசென்னையில் அவர் வாழ்ந்த வியாசர்பாடி பகுதியில் ஏதாவது ஒரு சாலைக்கு சுவாமி சகஜானந்தா பெயர் சூட்ட வேண்டும். 12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப் பெறுவதாக முதல்வர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்