கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது விஜயங்குப்பம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். பெயிண்டர் வேலை செய்து வரும் இவர் கிராம ஊராட்சியில் கட்டிடங்கள் பராமரிப்பின்மை, பொதுமக்கள் பிரச்சனைகள், அரசு திட்டங்களைக் கிராமங்களில் முறையாகச் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தீவிரமாக இயங்கியவர். மேலும், ஊர் இளைஞர்களுடன் ஒன்று சேர்ந்து அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுப்பது, தீர்க்கப்படாத பிரச்சனைகளைத் தீர்த்து வைக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்துவது என ஊர் மக்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்களுக்காக முன்னின்று செயலாற்றியவர்.
இந்தநிலையில் இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவருடன் ஒரே பைக்கில் உளுந்தூர்பேட்டைக்கு வந்துள்ளார். ஊர் பிரச்சினை சம்பந்தமாக ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகார்கள் பற்றி வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்துப் புகார் மனு தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார். பிறகு இரவு மீண்டும் பைக்கில் தங்களது ஊருக்குச் சென்றுள்ளனர் பாண்டியன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும்.
அப்போது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நகர் ரயில்வே மேம்பாலம் அருகே பைக் செல்லும்போது வாகன விபத்தில் சிக்கி மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருடன் சென்ற பாண்டியன் காயங்களுடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மணிகண்டன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே மணிகண்டன் மனைவி, தனது கணவர் சாவில் சந்தேகம் உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவர் பொதுநலச் சேவைகள் செய்யும்போது பலர் அவர் மீது காழ்ப்புணர்ச்சியில் இருந்ததாகவும், எனவே அவரது சாவில் சந்தேகம் உள்ளது என்று கூறி உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் மணிகண்டன் விபத்தில் இறந்தாரா? அல்லது வேறு யாரேனும் விபத்து போல் செய்து அவரை கொலை செய்தனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் மணிகண்டன் தரப்பினர் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்ட நிலையில் மீதமிருந்த சுமார் 20 சென்ட் காலி இடம் அந்தப் பகுதி மக்களின் தேவைகளுக்காக எதிர்காலத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பள்ளிக் கட்டிடம் நூலகம் ஆகியவை கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த பலராமன் இவரது சகோதரர் ஆசீர்வாதம் ஆகிய இருவரும் அடுக்குமாடி கட்டிடத்தைக் கட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக மணிகண்டன் பொதுமக்கள் தேவைக்காக இருக்கும் காலி இடத்தை ஆசீர்வாதம் பலராமன் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்து அடுக்குமாடி கட்டிடம் கட்டி வருவதாக அரசு அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தார். இது தொடர்பாக அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை மணிகண்டன் தனது ஆதரவாளர்களோடு வந்து உளுந்தூர்பேட்டை வட்டாட்சியரை நேரில் சந்தித்து கட்டுமானப் பணியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
அதன் பின்பு அன்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் தனது நண்பர் வீரபாண்டியன் என்பவரோடு மணிகண்டன் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை நகர் ரயில்வே மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மணிகண்டனின் இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் மணிகண்டன் ரத்த காயத்தோடு உயிரிழந்த நிலையில் வீரபாண்டியன் உயிருக்கு ஆபத்தான நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே மணிகண்டன் சென்ற இருசக்கர வாகனத்தின் பின் புறமாக காரில் வந்த ஒரு கும்பல் அவரது இரு சக்கர வாகனத்தில் மோதி இருசக்கர வாகனம் தடுப்புச் சுவரில் மோதிய பிறகு மணிகண்டனும் வீரபாண்டியன் காயமடைந்து கீழே விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால் மணிகண்டன் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உடலை அடக்கம் செய்ய கிராம மக்களும் அவரது உறவினர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மணிகண்டனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு இன்று காலை அடக்கம் செய்ய இருந்த நிலையில் மணிகண்டன் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மணிகண்டன் மரணத்திற்குக் காரணமான பலராமன் ஆசீர்வாதம் ஆகியோரை கைது செய்ய வேண்டும். அத்துமீறி கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி கட்டிடத்தை இடித்து மணிகண்டன் விருப்பத்தின் பேரில் அந்த இடத்தில் அரசு பொது நூலகம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி மணிகண்டன் உடலை அடக்கம் செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியர் காதர் அலி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணிகண்டனின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்த பிறகு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இன்றைய தினமே உடனடியாக அளவீடு செய்து அரசுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள கட்டிடங்களை இடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி கூறியதைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தைக் கைவிட்ட கிராம மக்கள். பின்னர் அமைதியான முறையில் மணிகண்டனின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை நிலவு வாய்ப்பு இருந்ததால் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கிராம மக்களின் தேவைகளுக்காக போராடியும் அரசு அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தும் அந்தக் கிராமத்தில் நடக்கும் அநீதிகள் தொடர்பாகக் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வைத்த மணிகண்டனின் இந்த மர்ம மரணம் அந்தக் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.