புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் படிப்பை முடித்துவிட்டு வெளியூரில் வேலை செய்து வருகிறார். தன் தாயாரிடம் பேச முதல் முறையாக தனது சம்பளத்தில் இருந்து அமேசான் ஆன்லைன் வர்த்தக மையத்தில் ரூ. 7100க்கு 'சாம்சங் M04’ ஆர்டர் செய்துள்ளார்.
இந்த ஆர்டரை கர்நாடக மாநிலம் பெங்களூர் மகாவீர் டெலி வோல்டு நிறுவனம் எடுத்துக் கொண்டது. தான் வெளியூரில் இருப்பதால் தனது நண்பர் அருண் நேரு முகவரியையும் கொடுத்து செல்போன் மற்றும் பார்சல் கட்டணம் என முழுத் தொகையும் ஆன்லைனிலேயே செலுத்திவிட்டார். தங்கள் ஆர்டர் பதிவு செய்யப்பட்டது தங்களுக்கான பார்சல் எங்கள் முகவர்கள் தேடி வந்து தருவார்கள் என்று கூறியுள்ளனர்.
ஆர்டர் செய்த 7வது நாள் பார்சல் வந்திருப்பதாக டெலிவரி முகவர் செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்ததால் அருண் நேரு பார்சலை வாங்கி கார்த்திக் அம்மாவுக்காக முதன் முதலில் வாங்கிய செல்போன் என்பதால் அங்கேயே பிரிக்காமல் அம்மாவே பிரித்துப் பார்க்கட்டும் என்று பார்சலை பெற்றுக்கொண்டு கார்த்திக் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். அம்மாவுக்காக மகன் ஆசை ஆசையாய் வாங்கிய செல்போன் பார்சலை அம்மாவிடம் காட்டிவிட்டு வீட்டில் வைத்து பிரித்தபோது உள்ளே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
கசங்கி இருந்த பார்சலை பிரித்தபோது, கார்த்திக் ஆர்டர் செய்திருந்த செல்போன் பெட்டி இருந்தது. பெட்டியைத் திறந்து பார்த்தால் பெட்டிக்குள் செல்போனுக்கு பதிலாக சலவை சோப், சாம்சங் செல்போன் சார்ஜர், ஆன்லைன் ஆர்டருக்கான பில் ஆகியவை இருந்தது. உடனே சம்பந்தப்பட்ட அமேசான் ஆன்லைன் நிறுவனத்திலும் டெலிவரி செய்த பேராவூரணி நிறுவனத்திலும் கேட்டால் சரியான பதில் இல்லை.
கடந்த 10 வருடங்களாக அமேசானில் பல பொருட்கள் வாங்கி இருக்கிறேன் ஆனால் இந்த முறை என் அம்மாவுக்காக முதல் முறையாக செல்போன் வாங்க அமேசானில் ஆர்டர் பண்ணி நான் வெளியூரில் இருப்பதால் என் நண்பன் முகவரிக்கு பார்சலை அனுப்பச் சொன்னேன். ஆனால் சலவை சோப் அனுப்பி என்னை ஏமாற்றிவிட்டனர். இதனால் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அமேசானில் புகார் பதிவு செய்தும் எந்த பதிலும் இல்லை. டெலிவரி கொடுத்த பேராவூரணி நிறுவனமும் பதில் தரவில்லை. அதனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். என்னைப் போல இன்னும் எத்தனை பேரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களோ என்கிறார் கார்த்திக்.