கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் படி நேற்று (21.03.2023) மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளர் கண்ணன், ஏழுமலை மற்றும் காவலர்கள் முருகானந்தம், ராஜா ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேப்பூர் அடுத்த கழுதூர் கிராமத்தில் அமுதா என்பவரின் வீட்டின் அருகே வெள்ளை நிற சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்து சந்தேகமடைந்த போலீசார் மூட்டையை சோதனை செய்ததில் ரேஷன் அரிசி 50 கிலோ வீதம் 22 மூட்டைகளில் சுமார் 1,100 கிலோ பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில் வேப்பூர் அடுத்த விளம்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் சார்லஸ் (28) என்பவர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் சார்லஸை கைது செய்தனர்.
இதேபோல் நேற்று முன்தினம் (20.03.2023) வேப்பூர் அடுத்த மலையனூர் கிராமத்தில் நள்ளிரவு 12 மணியளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சிறுபாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று அங்கு சோதனை செய்ததில் 3000 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரிய வந்தது.
இதையடுத்து அரிசி கடத்தலில் ஈடுபட்ட வேப்பூர் அடுத்த மங்களூரைச் சேர்ந்த பொன்னன் மகன் பரமசிவம் (48), மலையனூரைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் சத்யராஜ்(28), அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் செல்வம்(32), கட்சிமைலூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் கவியரசன்(32) ஆகிய நால்வரையும் சிறுபாக்கம் போலீசார் பிடித்து கடலூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் புலனாய்வுப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கடத்த முயன்ற 3000 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மினி லாரி வாகனத்தை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் புலனாய்வுப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான வேப்பூர் பகுதியில் இதுபோன்று அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகவும், அரிசி கடத்தலுக்கு காவல்துறையில் உள்ள சில 'கருப்பு ஆடுகள்' அரிசி கடத்தும் வாகனத்துடன் சென்று மாவட்ட எல்லையைத் தாண்டி விட்டு விட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதையடுத்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் கடந்த சில நாட்களாக காவல்துறையினரும், மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டதாலேயே தொடர்ந்து அரிசி கடத்தல் பேர்வழிகள் சிக்கி வருகின்றனர்.