தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அதிக அளவில் கனிம வளங்களை லாரிகளில் ஏற்றி கேரளாவுக்கு அனுப்பி வைப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் கனிமங்களை ஏற்றிச் சென்ற ஏழு கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் சுமார் நூற்றுக்கணக்கான வாகனங்களில் கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தி செல்வது தொடர்கதையாகி வருகிறது. இது குறித்து புகார்களும் குவிந்து வந்தது. பல்வேறு அமைப்புகளும் இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் அந்தப் பகுதிகளில் கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு அதிக பாரத்துடன் லாரிகள் அணிவகுத்து நிற்பது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது.
இந்நிலையில் அந்த பகுதியில் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற கனரக லாரிகளை நிறுத்திய போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 40 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. வாகனங்களின் எடை சரிபார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏழு வாகனங்களுக்கு தலா இருபதாயிரம் ரூபாய் என 1.4 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது காவல்துறை. தொடர்ந்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இதே போன்று தினமும் சோதனைகள் நடந்தால் அதிகளவிலான கனிம வளங்கள் தமிழகத்தில் இருந்து கடத்திச் செல்வது தடுத்து நிறுத்தப்படும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.