வீட்டிலிருந்த பொருட்களை மற்றொரு வீட்டுக்கு மாற்றும்போது ஏற்பட்ட மிகச்சிறிய கவனக்குறைவு மூன்று பேரின் உயிரையே பலி கொண்டுள்ளது. அப்படிப்பட்ட சோக சம்பவம் ஒன்று தர்மபுரி அருகே நடந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் சந்தைப்பேட்டை ரோட்டில் பச்சையப்பன் என்பவருக்கு சொந்தமாக வீடு ஒன்று இருந்தது. வீட்டின் இரண்டாவது மாடியில் இலியாஸ் என்ற நபர் குடும்பத்துடன் வசித்து வந்தார். வீட்டு உரிமையாளரான பச்சையப்பனின் மூத்த மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதால் வாடகைக்கு இருக்கும் இலியாசை வேறு வீட்டிற்கு செல்ல வீட்டின் உரிமையாளர் பச்சையப்பன் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து இலியாஸ் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அருகில் உள்ள கோல்டன் தெருவில் உள்ள வேறு ஒரு வீட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
வீட்டிலிருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இதற்காக எடுத்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த பொருட்களை வேறு வீட்டிற்கு மாற்றும் பணியில் இலியாஸ் ஈடுபட்டிருந்தபோது அதற்காக உதவும் நோக்கில் வீட்டு உரிமையாளர் பச்சையப்பன், கோபி, குமார் ஆகியோர் உதவி புரிந்துள்ளனர். பேக் செய்யப்பட்ட சிறிய பொருட்களை வண்டியில் ஏற்றியவுடன் பெரிய பொருட்களான பீரோ உள்ளிட்டவற்றை இரண்டாவது மாடியில் மேல்மாடத்திலிருந்து கயிறு மூலம் கட்டி கீழே இறக்க நால்வரும் திட்டமிட்டனர். திட்டமிட்டபடி பீரோவை இறக்கிக் கொண்டிருந்த பொழுது, வீட்டிற்கு வெளியே உயர் மின்னழுத்த கம்பியில் பீரோ பட்டதால் மின்சாரம் தாக்கியது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் இலியாஸ், கோபி, பச்சையப்பன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கவலைக்கிடமான நிலையில் குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மூவரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கவனக்குறைவால் ஏற்பட்ட மூன்று பேரின் உயிரிழப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.