கிருஷ்ணகிரியில் என்.சி.சி முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட சிவராமன் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கலையரங்கில் தங்கியுள்ளனர். இத்தகைய சூழலில் தான் கடந்த 9 ஆம் தேதி கலையரங்கில் வழக்கம்போல் 12 வயது சிறுமி ஒருவர் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் அங்கு வந்த தேசிய மாணவர் படையின் பயிற்றுநர் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் (வயது 32) சிறுமியை அங்கிருந்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் பேரில் என்.சி.சி. பயிற்று சிவராமன், பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வர் சதீஸ் குமார், சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனிஃபர், தாளாளர் சாந்தன் என்.சி.சி. பயிற்றுநர்களான சக்திவேல், இந்து, சத்யா, சுப்பிரமணி ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து முக்கிய நபரான சிவராமனை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில் அனுமதி இல்லாமல் போலி என்.சி.சி கேம்ப் நடத்தியது தெரியவந்தது.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முழுமையான விசாரணைகள் நடக்க வேண்டும் என்பதற்காக காவல்துறை புலனாய்வு ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்புக் குழு உருவாக்கப்பட்டது. சமூக நலத்துறை செயலாளர், மாநில சமூக பாதுகாப்பு ஆணையர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உட்பட ஏழு பேர் இந்த குழுவில் உள்ளனர். காலை இந்த குழு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டது. இந்த சம்பவம் நடந்த பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அதேபோல் சிவராமனால் வேறு யாரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்த இருப்பதாக ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரியில் மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் ஏற்கனவே எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இன்று காலை அவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் சிவராமனின் தந்தை அசோக்குமார் நேற்று இரவு கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அசோக்குமார் மதுபோதையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.