வங்கி காவலிலிருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர், வங்கி ஓய்வறைக்குள் சென்று தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து மரணித்துள்ளார். தற்கொலைக்கான காரணம் பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள அரிட்டாப்பட்டியை சேர்ந்தவர் யோகேஸ்வரன். 2013- ஆம் ஆண்டைய ஆயுதப்படை காவலரான இவர் 2018- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை கோயம்புத்தூர் புதூரிலுள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 4ம் அணியில் காவலராகப் பணியாற்றி வந்தவர் கடந்த 2018- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இடமாறுதலாகி சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை முகாமில் இணைந்து பணியாற்றி வந்தார்.
இவ்வேளையில், சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரிலுள்ள இந்தியன் வங்கியின் பாதுகாவலர் பணிக்கு அனுப்பப்பட்ட நிலையில், இன்று (02/03/2020) காலை 10.00 மணியளவில் வங்கியின் ஓய்வறைக்குள் சென்று உள்பக்கம் தாழிட்டுக்கொண்டு பாதுகாப்புத் துப்பாக்கியைக் கொண்டு தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்துள்ளதாக கூறப்படுகின்றது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
"இறந்து போன யோகேஸ்வரன் சற்று அதிர்ந்து கூட பேசாதவன். இவனது திருமணத்திற்காக பெண் பார்த்து வரும் நிலையில் தற்பொழுது இந்த முடிவை எடுத்திருக்கின்றான். எங்களைப் பொறுத்தவரை ஆயுதப்படையிலுள்ள பணிச்சுமையாலே இவன் இறந்திருக்கக் கூடும். சுமார் 700 ஆயுதப்படைக் காவலர்களைக் கொண்ட சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை தென்மண்டல ஐ.ஜி.கட்டுப்பாட்டிலுள்ளது.
மாவட்டம் சிறியது என்றாலும் தென்மாவட்டங்களில் எந்த பிரச்சனை என்றாலும் சிவகங்கை ஆயுதப்படை போலீசார் தான் டூட்டிக்குப் போகவேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் இங்குண்டு..! ஓய்வு மற்றும் விடுமுறை என்பதே இங்கு கிடையாது. பனிஷ்மெண்ட் டூட்டி என்பார்களே அது தான் இங்குள்ள சிவகங்கை ஆயுதப்படை காவலர்களின் நிலை." என்கின்றனர் ஆயுதப்படையில் பணியாற்றும் சக போலீசார். வார முதல் நாளில் வங்கியில் இச்சம்பவம் நடைப்பெற்றதால் அனைத்து பணிகளும் முடங்கி, பரபரப்பு தொற்றியுள்ளது திருப்பத்தூரில்.!!