கிராமம் முழுவதுமுள்ள வயல்களில் ஆட்டுக்கிடை போடப்பட்டிருக்க, தன்னுடைய வயலிலும் ஆட்டுக்கிடை போடவேண்டுமென எழுந்த தகராறில் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த இந்த கொலை வழக்கில் 16 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது மாவட்ட முதன்மை நீதிமன்றம்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி காவல்நிலைய சரகம் கச்சநத்தம் கிராமத்தினை சேர்ந்தவர் சந்திரகுமார். இதே கிராமத்திலுள்ள வயல்களில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த முனியாண்டி என்பவர் வருடந்தோறும் ஆட்டுக்கிடை போடுவது வழக்கம். சம்பவ நாளான 2010 ஆகஸ்ட் மாதம் 30ம் தேதியன்று காலை 10.00 மணியளவில் சந்திரகுமார் முனியாண்டியை சந்தித்து தன்னுடைய வயலிலும் ஆட்டுக்கிடை போடவேண்டுமென கேட்டிருக்கின்றார்
"உனக்கு மட்டும் கிடை போட முடியாது." என மறுத்துக்கூறிய நிலையில் இருவருக்கும் வாய்த்தகராறு முற்றியுள்ளது. சுற்றியுள்ள பொதுமக்கள் இருவரையும் சத்தம் போட்டு அனுப்பி வைத்துள்ளனர். மதியம் 02.30 மணியளில் ஆவரங்காடு ரேசன் கடை அருகே அல்லிமுத்து, சுரேஷ்குமார், பாண்டி மற்றும் மதி ஆகிய நபர்களுடன் சந்திரகுமார் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, அதே ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த சேகர், பூசைமணி, பாண்டிவேல், வீரபத்திரன், முனியாண்டி, அழகுபாண்டி, மற்றொரு முனியாண்டி, ராஜாங்கம், பழனியாண்டி, பிரபு, முத்துபாண்டி, ரதி, ராமாயி, மற்றொரு வீரபத்திரன், மைக்கேல், கணேசன், கருப்பையா மற்றும் செல்வராஜ் ஆகியோர் கூட்டாக வந்து வேல்கம்பு, கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய பொழுது அல்லிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் அப்பொழுதே பாண்டிவேல், வீரபத்திரன், மற்றொரு வீரபத்திரன், பூசைமணி உள்பட 6 பேர் சிவகங்கை ஜே.எம். நீதிமன்றத்தில் சரணடைந்தனர். திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் 124/2010 என்ற குற்றவழக்காக பதிவு செய்யப்பட்டு சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 9 வருடங்களாக இவ்வழக்கு நடைப்பெற்று வந்தது.
இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பாக, "குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 18 நபர்களில் சேகர் மற்றும் செல்வராஜ் இறந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 16 நபர்களுக்கும் ஆயுள்தண்டனையும், தலா ரூ.8 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக." அறிவித்தார் சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன். 9 வருடங்கள் கடந்த நிலையில் 16 நபர்களுக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதால் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.