"அவங்க கூட எங்க உறவு எதற்கு..? அவங்களை கழட்டி விட நேரம் பார்க்கின்றோம்." என தமிழக கதர் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் அம்பலம் பேசியது தற்பொழுது பாஜக மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்க, அடுத்த நிகழ்ச்சியில், "அவங்களும் நாங்களும் உறவுக்காரங்க.. எங்களைப் பிரிக்க முடியாது." என பல்டியடித்துள்ளார் அவர்.
சர்ச்சைப் பேச்சுக்களுக்கு சொந்தக்காரர் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினரும், கதர் கிராம தொழில் துறை அமைச்சருமான பாஸ்கரன் அம்பலம். முதல் நிகழ்ச்சியில் பேசியதை மறு நிகழ்ச்சியில் மாற்றிப் பேசும் வித்தைக்காரரான அமைச்சர் பாஸ்கரன் அம்பலம் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நடைப்பெற்ற எம்ஜிஆரின் 103- வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் வெற்றி விழாக் கூட்டத்தில் பேசியது வைரலாகி பாஜக தரப்பில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள், கட்சித்தொண்டர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் மைக் பற்றிய அமைச்சர் பாஸ்கரன் அம்பலம், "இந்த ஊரைப் பொறுத்தவரை நாங்க ஆளுங்கட்சியாக இருந்தாலும், திமுக தான் இங்க ஆட்சி செய்யுது. உள்ளாட்சி தேர்தலில் பெருமளவு வெற்றிப் பெற்றோம்.
இருப்பினும் 5 ஓட்டுக்கள் 3 ஓட்டுக்களில் எத்தனையோ பேர் தோற்றுள்ளார்கள். எங்கள் அதிகாரத்தைக் கொண்டு அதை நாங்கள் மாற்றி அறிவித்திருக்கலாமே.?.. அதை நாங்கள் செய்யவில்லை. நாங்கள் நேர்மையானவர்கள்." என்றவர் அதிகளவில் இஸ்லாமியர்கள் வசிக்கும் அவ்வூரில் அவர்களை சமாதானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, "பிஜேபியிடம் இருந்து எந்த உறவும் இல்லை... நாங்கள் தனியாக செல்வதற்கு எந்த நேரம் வருமென எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். அவங்க உறவு எதற்கு என எங்களின் அமைச்சரவையிலே எல்லாரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.! நீங்கள் கடந்த எம்எல்ஏ தேர்தலில் எங்களுக்கு ஓட்டுபோடமல் ஒதுக்கி விட்டீர்களே தவிர நாங்கள் உங்களை ஒதுக்க மாட்டோம்." என்று பேச்சை முடித்தார் அவர். இது வாட்ஸ் அப்பில் வைரலாகி பாஜக தரப்பில் கொந்தளிப்பை உருவாக்கியது.
இந்நிலையில், அடுத்த நிகழ்ச்சியான காரைக்குடியில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில், "பஞ்சாயத்து தலைவர்கள் காவல் நிலைய பஞ்சாயத்தில் கலந்துகொள்ள வேண்டாம் அதில் சிக்கல் வரும்.! நிறைய செலவழித்து தான் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வந்திருப்பீர்கள், ஆதலால் பஞ்சாயத்தை எதிர்பார்க்காமல் நிலத்தை விற்று கடனை அழைத்துக் கொள்ளுங்கள்." என்றவர், "இங்கு பேசியது குடியுரிமை சட்டம் பற்றி தான். பாஜக கூட்டணிப் பற்றி அல்ல..! எங்களையும் அவர்களையும் எக்காலத்திலும் யாராலும் பிரிக்க முடியாது." என பேசி முடித்தார். எனினும், காமெடி நடிகர் வடிவேலுவின் சிறந்த டயலாக்கான அது வேற வாய் எனும் டயலாக்குடன் அமைச்சரின் பேச்சு வைரலாகியுள்ளது.