ஊரடங்கால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், கூகுள் மற்றும் யூ-ட்யூப்பினைப் பார்த்து விதம் விதமாக கள்ளச்சாராயத்தினை தயாரித்து தங்களை ஆசுவாசுப்படுத்தி வருகின்றனர் மது பிரியர்கள். இந்நிலையில், முதல்நாள் 200 லிட்டர், மறுநாள் 100 லிட்டர் என தொடர்ச்சியாய் கள்ளச்சாராயத்தை தேடி அழித்துள்ளது டிஎஸ்பி கார்த்திக்கேயன் தலைமையிலான மானாமதுரை காவல்துறை துணைச்சரகப் போலீஸ் டீம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல்துறை துணைச்சரகத்திற்குட்பட்ட கீழமாயாளி கிராமத்திலுள்ள முந்திரிக்காட்டில், வெல்லம், நவச்சாரம், பேரீச்சம்பழம், கடுக்காய் மற்றும் சாதிக்காய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து பெரிய பேரலில் ஊறவைத்து, பத்து நாட்கள் கழித்து நன்கு காய்ச்சி ஆவியாக்கலின் மூலம் கள்ளச்சாராயத்தினை காய்ச்சி எடுக்க தயார் நிலையில் இருக்கின்றார்கள் என்கின்ற ரகசிய தகவல் மானாமதுரை துணைச்சரகப் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், டிஎஸ்பி கார்த்திக்கேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சேது, எஸ்.ஐ.க்கள் மாரிகண்ணன், நாகராஜ், போலீசார்கள் ராஜா மற்றும் சந்திரன் ஆகியோர் முந்திரிக்காட்டினை சல்லடையிட நொதித்து தயாரான நிலையிலிருந்த 200 லிட்டர் கள்ளச்சாராய பேரல்கள் கிடைத்தன. விசாரணையின் அடிப்படையில் கள்ளச்சாராயம் காய்ச்சிய ராமு என்பவர் கைது செய்யப்பட்டு, கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டது. அதுபோல அதற்கடுத்த நாளான இன்று கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சிப்காட் அருகிலுள்ள மேலப்பிடாவூர் எனும் ஊரில் நடத்திய சோதனையில் 100 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு, சாராயம் காய்ச்சிய அதே ஊரை சேர்ந்த ராஜூவும் கைது செய்யப்பட்டார். டிஎஸ்பி-யின் அதிரடி நடவடிக்கையால் மானாமதுரை காவல்துறை துணைச்சரகத்தில் தொடர்ச்சியாய் கள்ளச்சாராயங்கள் சிக்குவதால் பெரும் பரப்பரப்பு தொற்றியுள்ளது.