புதுச்சேரி அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விபல்குமார்(36). வில்லியனூரில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார். புதுச்சேரி காவல்துறையில் 2011-ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்த இவர் நெட்டபாக்கம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்கள் விடுப்பு எடுத்திருந்த அவர் 21-ஆம் தேதி காலை மீண்டும் பணியில் சேர்ந்தார். அன்று காலை பணியில் இருந்தபோது திடீரென காவல்நிலையம் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பு கட்டிடத்திற்கு சென்ற அவர் பகல் 12 மணியளவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். முதல் கட்ட விசாரணையில் பணியின்போது உயர் அதிகாரிகள் கொடுத்த டார்ச்சரால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பாக விபல்குமார் தனது டைரியில் தனது கைப்பட எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே விபல்குமாரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லுாரி பிரேத கிடங்கில் வைக்கப்பட்டது. அவரது உடலை உடற்கூறாய்வு செய்ய போலீசார் 22-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது விபல்குமார் உடலை எய்ம்ஸ் மருத்துவர்களை கொண்டு உடற்கூறாய்வு செய்ய வேண்டும், வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட விபல்குமாரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் அரசு வேளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலையுறுத்தி அவரது தந்தை பாலு, தாய் விஜயா மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவ கல்லுாரி முன் நேற்று முன் நாள் வழுதாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி, கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்பினரும் போரட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சீனியர் எஸ்.பி ராகுல் அகர்வால், சப்- கலெக்டர் சுதாகர், எஸ்.பிக்கள் ரங்கநாதன், ஜிந்தா கோதண்டராமன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் போராட்டக்குழுவினர் ஏற்க மறுத்து இரண்டு நாட்களாக சடலத்தை வாங்க மறுத்து போராடினர். இதனிடையே காவல்துறை உயர் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் கொடுத்த டார்ச்சர் காரணமாகவே விபல்குமார் தற்கொலை செய்து கொண்டார் எனவும், இன்ஸ்பெக்டர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விபல்குமார் இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தை மக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். மேலும் விபல்குமார் தற்கொலை குறித்து சி.பி.ஐ விசாரிக்க வலியுறுத்தி அவரது தந்தை பாலு, கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, தலைமை செயலர் அஸ்வனிகுமார், டி.ஜி.பி மற்றும் தலைமை நீதிபதி ஆகியோருக்கு மனு அனுப்பினார்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி, “சப்-இன்ஸ்பெக்டர் விபல்குமார் மரணம் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி.யை அவரது குடும்பத்தினரை சந்தித்து நேர்மையான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீஸ்க்கு மாற்றப்பட்டுள்ளது என்றும், விபல்குமாரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்தும் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் கூறினார்.
அதேசமயம் சப்-இன்ஸ்பெக்டர் விபல்குமார் தற்கொலைக்கு காரணமான இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் காரைக்கால் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து விபல்குமாரின் சடலம் இன்று அடக்கம் செய்யப்பட்டது. உடலுக்கு புதுச்சேரி டி.எஸ்.பி பாலாஜி ஸ்ரீவஸ்தவா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் காவல்துறையினர் மற்றும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.