சீர்காழி இரட்டைக்கொலை சம்பவத்தில் என்கவுன்ட்டர் நடத்தப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் ஜனவரி 27- ஆம் தேதி நகை வியாபாரியின் வீட்டில் புகுந்த வடமாநில கொள்ளைக் கும்பல், வியாபாரியின் மனைவி மற்றும் மகனைக் கொன்று வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், காரில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ்-ஸை ட்ராக் செய்த காவல்துறையினர் கொள்ளைக் கும்பலை சுற்றி வளைத்துக் கைது செய்து, அவர்களிடம் இருந்த தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர். அப்போது, காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது மணிபால் சிங் என்பவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வழக்கின் விசாரணை அதிகாரியாக திருச்சி சிபிசிஐடி டி.எஸ்.பி. பால் பாண்டி நியமிக்கப்பட்டுள்ளார்.