பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் (74) அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு, எஸ்.பி.பி உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கினர்.
எஸ்.பி.பி.யின் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், "மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவர் எஸ்.பி.பி. மக்களுக்குப் பாடியது போதும் இனி என்னிடம் பாடவா என இறைவன் அழைத்துக் கொண்டான். எத்தனை ஆயிரம் பாடல்களை எத்தனை மொழிகளில் பாடிய உன்னதக் கலைஞன் எஸ்.பி.பி." எனப் புகழஞ்சலி செலுத்தினார்.