கருநாடக மாநிலத்தில் சித்தராமையாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாளை (12.5.2018) கருநாடக மாநிலத்தில் நடைபெற விருக்கும் சட்டமன்றத் தேர்தலில், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவரும், சீரிய பகுத்தறிவாளருமான சித்தராமையா தலைமையில் போட்டியிடும் காங்கிரசு கட்சியின் வேட்பாளர்களுக்கே கருநாடக திராவிடர் கழகத்தவர்களும், கருநாடகத் தமிழர்களும் வாக்களிக்க வேண்டுகிறோம்.
அங்கு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், 2019 இல் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர ஆயத்தப்படுத்தும் முன்னோடித் தேர்தல் போன்றது!

இந்து ராஜ்ஜியத்தை நிலை நாட்டல், ஒடுக்கப்பட்டமக்கள்விரோதஆட்சி யாகவும், 2014 இல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காற்றில் பறக்க விட்ட சமூகநீதிக்கு எதிராக சல்லடம் கட்டிக் கொண்டாடும் ஆட்சியாகவும் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., அரசு இருப்பதால், அக்கட்சியை, பா.ஜ.க.வைத் தோற்கடிப்பதே கரு நாடக மாநில வாக்காளர்களின் முன்னுரிமை யாகும்.! கருத்துரிமை பாதுகாப்புக்கு செய்யப்படும் சரியான ஏற்பாடும் ஆகும்.
எனவே, அங்குள்ள திராவிடர் கழகத் தோழர்கள், தமிழ் இன உணர்வாளர்கள் 5 ஆண்டு ஆட்சியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து சாதனைகளைக் காட்டி வாக்குக் கேட்கும் முதல்வர் சித்தராமையாவின் ஆட்சியையே மீண்டும் கொண்டுவர தெளிவாக வாக்களித்து வெற்றி பெறச் செய்வீர்! என்று அவர் கூறியுள்ளார்.