தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் நடத்தும் 969 காலி பணியிடங்களுக்கான காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வு அறிவிப்பை 2019 மார்ச் மாதம் வெளியிட்டு, ஜனவரி 12, 13 தேதிகளில் தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
இந்த தேர்வில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாகவும், மறுதேர்வு வைக்க வேண்டும் எனவும் எஸ்.ஐ தேர்வு எழுதிய மாணவர்கள் நீதி மன்றத்தை நாடியுள்ள நிலையில், இதற்கான நிபுணர் குழு அமைத்து தேர்வு சரியான முறையில்தான் நடைபெற்றதா என்று விசாரணை நடத்தி நீதிமன்றதில் சர்மபிக்க சொன்ன நிலையில், அதனை சமர்ப்பிக்காமலே, தற்போது உடல் தகுதி தேர்வு பணியை தேர்வாணையம் தொடங்கியுள்ளது.
இத்தேர்வானது செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 5,478 பேருக்கு உடற்தகுதி தேர்வு நடைபெற உள்ள நிலையில் உடற்தகுதி தேர்வு நடைபெறும் 48 மணி நேரத்திற்கு முன்பு கரோனா பரிசோதனை செய்த மருத்துவ சான்றிதழை கொண்டுவர சொல்லி தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் எஸ்.ஐ. தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்குமே சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உடல் தகுதித் தேர்வு நடைபெறும் என்ற நிலையில் முதல் நாளான இன்று மட்டும் 603 பேருக்கு உடல் தகுதித் தேர்வு நடைபெற்றது. இதில் உடல் தகுதித் தேர்வுக்கு வந்த மாணவர்கள் ஸ்டேடியத்தின் முன்பாக எந்த ஒரு பாதுகாப்பு இல்லாமல் கேட்டின் முன்புரத்தில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து இருந்த நிலையில் அனைவருக்கும் கரோனா அச்சத்தை உண்டாக்கியுள்ளது.
சென்னையில் கரோனா தீவிரமாக இருக்கும்போது எதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருப்பவர்களை இங்கே வரவைக்கிறார்கள்? ஒரு மைதானத்தில் 600 பேரை வைத்து உடற்தகுதி தேர்வு செய்வது கரோனா காலத்தில் சரியா? அவர்கள் வரும் வழியில் கரோனா தொற்று ஏற்பட்டால் அது அனைவரையும் பாதிக்கும் என்று தேர்வாணையத்திற்கு தெரியாதா? இவ்வளவு நிபந்தனைகளை சொல்லிய தேர்வாணையமே சமூக இடைவெளியும், பாதுகாப்பும் இன்றி, உடற்தகுதி தேர்வை இன்று நடத்துகின்றது.
மதுரை கிளை உயர்நீதிமன்றம் எழுத்து தேர்வின் முறைகேட்டை நிபுணர் குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்ட நிலையில், எதற்காக இவ்வளவு அவசர அவசரமாக உடற்தகுதி தேர்வை, அதுவும் கரோனா காலத்தில் நடுத்துகின்றனர் என்ற கேள்வியை தேர்வுக்கு வந்தவர்கள் கூறுகிறார்கள்.