கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ் டூ மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டது. கலவரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் தரப்பில் 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஐந்து பேரும் காணொளி மூலம் விசாரணைக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்நிலையில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கும் நீதிமன்ற காவல் வரும் ஆகஸ்ட் 26 தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று, உயிரிழந்த சிறுமி ஸ்ரீமதியின் பிறந்தநாள். இதனால் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருப்பதாகவும், மரக்கன்றுகளை நடும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த சிறுமியின் தாய் தெரிவித்திருந்தார். இதனால் மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூரில் ஐந்து இடங்களில் சுமார் 600க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மரக்கன்றுகளை நடும் விழாவிற்கு வெளியூரிலிருந்து மக்கள் வரலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.