இந்தியாவில் மத்திய – மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவு தற்போது கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. கரோனா தொற்று பாதிக்கப்படாத மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டும், கரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாகவும் அமல்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தில் கரோனா அதிகம் பாதிப்புள்ள மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் அரசால் பட்டியலிடப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டத்தில் காய்கறி விற்பனை – மளிகை பொருள் விற்பனை கடைகள் அனைத்தும் மூடச்சொல்லி உத்தரவிடப்பட்டதால் மூடப்பட்டுள்ளன. அவை தீவிரமானகண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளன.
திருவண்ணாமலையில் உள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் இந்த உத்தரவுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டாலும் வளர்ந்த கிராமப்புற பகுதிகளில், கிராமங்களின் மைய கிராமங்களில் இந்த உத்தரவை 70 சதவிதம் மட்டும்மே மக்கள், வியாபாரிகள் கடைபிடிக்கின்றனர். 30 சதவீத அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளாக மளிகை, காய்கறி, மருந்து கடைகள், ஹோட்டல்கள், டீ கடைகள், பேக்கரிகள் திறக்கப்படுகின்றன. அப்படி திறக்கப்படும் கடைகளில் வருவாய்த்துறையை சேர்ந்த கீழ்மட்ட அதிகாரிகள் சிலர் சில இடங்களில் பணம் வசூல் செய்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகாவில் தாசில்தார் அலுவலகம் உள்ள பகுதி தண்டராம்பட்டு. தண்டராம்பட்டை சுற்றியுள்ள 50க்கும் அதிகமான கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க இங்குதான் வருவார்கள். இதனால் அரசின் கட்டுப்பாடுகளை மீறி சில அத்தயாவசிய பொருட்களின் கடைகள் திறக்கப்படுகின்றன. அப்படி திறக்கப்படும் கடைகளில் கடைகளுக்கு தகுந்தார்போல் 100 ரூபாய் கொடு, 500 ரூபாய் கொடு என பணம் வசூலிக்கிறார் இந்த கிராம நிர்வாக அலுவலரான சம்பத் என்கிறார்கள் வியாபாரிகள்.
இதுப்பற்றி நம்மிடம் பேசிய வியாபாரிகள் சிலர், மளிகை கடைனா ஆயிரம் ரூபாய் வரை பொருட்களா வாங்கிக்கறார். டீ கடை, ஹோட்டலில் 200 ரூபாய் பணம் தா, 10 சாப்பாடு தான்னு வாங்கறார். காய்கறி விற்பவர்களின் 100 ரூபாய் தா, பழம் விற்பவர்களிடம் 200 ரூபாய் தான்னு வாங்கறார். ஏதோ ஒருநாள்னா பரவாயில்லை. தினமும் வந்து வாங்கினால் எப்படிங்க? அரசு உத்தரவை மீறி கடை திறக்கறதால் இதை எங்களால் கேள்வி கேட்க முடியல, அவர் கேட்கறதை தர்ற வேண்டியதா இருக்கு. ஒரு மளிகை கடையில் போய் தாசில்தார் இல்லாதப்பட்டவங்க சிலருக்கு உதவ மளிகை சாமான் வாங்கி வரச்சொன்னார் அப்படின்னு 4 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மளிகை பொருள் வாங்கிக்கிட்டு போயிருக்கார்.
உண்மையில் அப்படி வாங்கிட்டுபோய் இல்லாதவங்களுக்கு தந்தா பரவாயில்லை. கடை திறந்தால் 100, 200 ரூபாய்னு வசூல் செய்யறவர், இல்லாதவங்களுக்கு தர்றதுக்குதான் வாங்கி போனார்ன்னு சொன்னா எப்படிங்க நம்பறது என கேள்வி எழுப்பினார்கள். உயர் அதிகாரிகள் இதனை விசாரித்து, தொடர்ந்து இதேபோல் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் வியாபாரிகள் வைக்கின்றனர்.
பொதுமக்கள் மட்டுமல்ல சின்ன, சின்ன வியாபாரிகளும் இந்த இக்கட்டான நேரத்தில் நொடிந்துப் போயுள்ளார்கள். அவர்களை வேதனையாக்குவது போல் செயல்படலாமா? இப்படி சிலர் செய்வது உயிரை துச்சமாக நினைத்து பொதுமக்களுக்கு சேவையாற்றும் அரசு பணியாளர்கள் பலரின் செயல்பாடுகளை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என வேதனைப்படுகின்றனர் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.