திருட்டு, வழிப்பறி என்றாலே பணம், நகை, செல்ஃபோன் ஆகியவற்றை திருடிச் செல்வார்கள் என்ற மனப்போக்கு சாதாரணமாகவே மக்களிடம் இருக்கும் நிலையில், சென்னையில் வீடு புகுந்து காலணிகளை மட்டும் திருடும் கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை சூளை பகுதியில் வெங்கடாசலம் தெருவில் வசித்து வரும் சந்தானம் என்பவர் வீட்டில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷூ ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்த புதிய மூன்று ஜோடி ஷூக்கள் காணாமல் போயிருந்தது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து பார்க்கையில், அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வீட்டு காம்பவுண்டில் நுழைந்து வீட்டு வாசலில் உள்ள காலணிகளை பாலித்தீன் பைகளில் போட்டு எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இது முதல்முறை அல்ல ஏற்கனவே சந்தானத்தின் வீட்டில் இரண்டு முறை இதேபோல காலணிகள் திருடப்பட்டதாக சந்தானம் பெரியமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல் கடந்த இரண்டு மாதங்களில் பெரியமேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ச்சியாக இதுபோன்று வெளியே வைக்கப்பட்டிருக்கும் விலையுயர்ந்த காலணிகள் திருத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
சென்னை வேப்பேரி, பெரியமேடு ஆகிய பகுதிகளில் காலணிகள் விற்பனை செய்யப்படும் பெரிய பெரிய கடைகள் இருப்பதால், இவ்வாறு திருடப்படும் விலை உயர்ந்த காலணிகளை, அப்பகுதியில் உள்ள கடைகளில் விற்றுப் பணமாக மாற்றி சம்பாதித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டிள்ளனர். நகை, பணம், விலை உயர்ந்த பொருட்கள் தொடர்பான திருட்டு வழக்குகளுக்கு மத்தியில் செருப்பு திருடப்பட்டது ''செருப்பைக் கூட விட்டு வைக்க மாட்டீர்களா'' என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.