கடலூர் அரசு மருத்துவமனையில் கரோனா நோய் பாதிப்பின் காரணமாக ஏகப்பட்ட நோயாளிகள் கொண்டுவந்து சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் ஒருவர் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (24.05.2021) காலை அவரது படுக்கையில் இருந்தவருக்கு மருந்து கொடுப்பதற்காக செவிலியர்கள் சென்று பார்த்தபோது அவரைக் காணவில்லை.
இரவு நேரத்தில் அனைவரும் தூங்கிய பிறகு மருத்துவமனையில் இருந்து அந்த நபர் தப்பி ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். இதனால் மருத்துவமனை பெரும் பரபரப்பானது. அங்கிருந்த ஊழியர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பொதுமக்கள் இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விசாரணையில் இறங்கினார்கள். அவர்களது விசாரணையில் கரோனா நோயாளி தப்பி ஓடியதாக எங்களுக்கு இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. மேலும், அதே நேரத்தில் தப்பி ஓடியதாக கூறப்படும் அந்த நோயாளியின் செல்ஃபோன் எண்ணில் தொடர்புகொண்டு பேசினோம். அவர், தான் எங்கும் தப்பிச் செல்லவில்லை. அரசு மருத்துவமனை டாக்டர்கள் எனக்கு நோய் சரியாகிவிட்டது என்று கூறி வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். அதன்படிதான் தற்போது தன் வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார்.
இதைப் போலீசார் மருத்துவமனை அதிகாரிகளிடம் கூறினார்கள். ஏன் இந்த குழப்பம் என கடலூர் அரசு மருத்துவமனை ஊழியர்கள் இதுகுறித்து நீண்ட ஆலோசனையும் ஆய்வும் செய்தனர். அதில் ஒரே பெயர் கொண்ட இரண்டு நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்ததாகவும், அதில் ஒருவர் குணமடைந்ததாக மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். அதே பெயர் கொண்ட மற்றொரு நோயாளி அதே பெயரில் இருந்ததால், அவர் சிகிச்சையில் இருப்பதாக மருத்துவர்கள் கருதியுள்ளனர். இதனால் ஏற்பட்ட குழப்பத்தால் முற்றிலும் குணமாகாத நபரைக் குணம் அடைந்ததாக கருதி அவரை மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளது கண்டறியப்பட்டது.
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று நெல்லிக்குப்பத்தில் மருத்துவர்களால் அனுப்பிவைக்கப்பட்ட நோயாளி வீட்டிற்குச் சென்று அவரை மீண்டும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். பெயர் குழப்பம் காரணமாக நோய் குணமானவரை வீட்டுக்கு அனுப்புவதற்குப் பதிலாக, சிகிச்சையில் உள்ளவரை வீட்டிற்கு அனுப்பிய மருத்துவமனை ஊழியர்களின் குழப்பமே இதற்கு காரணம் என்கிறார்கள் போலீசார்.