தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக அணி வெற்றி வாகை சூடி வருகிறது. இந்த நிலையில் அதிமுக தரப்பு மிகவும் எதிர்பார்த்த பகுதி என்றால் அது கொங்கு மண்டலம்.இங்கு தான் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் காலம் தொடங்கி ஜெயலலிதா காலம் வரை அதிமுக மிகவும் வலுவாக இருந்தது.
ஜெ. மறைவுக்குப் பிறகும் கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்று அக்கட்சியின் நிர்வாகிகள் கூறிவந்தனர். இந்த நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த கொங்கு மண்டலமும் அதிமுகவுக்கு முன்பு வலு சேர்த்ததோ அதே கொங்கு மண்டலம் இப்போது அதிமுகவை புரட்டிப்போட்டு திமுகவுக்கு பலமான வலுவை கொடுத்துள்ளது.
குறிப்பாக கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் என இந்த கொங்கு மண்டலப் பகுதிகளில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு சதவீதம் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் வரை கூடுதலாக வந்திருக்கிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வை விட திமுக 40 ஆயிரம் வாக்குகள் கூடுதல் பெற்று இருப்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு அரசியல் பார்வையாக இருக்கிறது.
இந்த சூழலில் கண்டிப்பாக கொங்கு மண்டலத்தில் 5 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி ஆகியோர் உறுதியாக நம்பியதோடு கட்சி நிர்வாகிகளிடம் அவர்கள் கூறிவந்தனர். ஆனால் நடந்ததோ இந்த கொங்கு மண்டலத்தில் அதிமுக தனது பலத்தை முழுமையாக இழந்துள்ளது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த அதிர்ச்சியில் இருக்க, அமைச்சர் வேலுமணி மற்றும் தங்கமணியிடம் எப்படி இப்படி தோல்வியை கொங்கு மண்டலம் நமக்கு இப்படி பரிசாக கொடுத்து விட்டதே என கூற அவர்கள் இருவரும் இங்கு முழுமையாக மோடி எதிர்ப்பு மட்டுமே வேலை செய்து விட்டது அதை திமுக சாதகமாக அரசியலில் பயன்படுத்தி விட்டது என்று தங்கமணியும் வேலுமணியின் கூறியிருக்கிறார்கள். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஐயோ எனக்கு இது அதிர்ச்சி மட்டுமில்ல மிகவும் ஷாக்காக உள்ளது எனக் கூறியிருக்கிறார்.
பொதுவாக இந்த மண்டலத்தில் அதிமுக கூடுதல் இடங்களை பெறும் என்று கருத்துக் கணிப்புகளில் மற்ற ஊடகங்களில் கூறிய போதும் நமது நக்கீரனில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என தொடக்கத்திலிருந்தே எழுதி வந்தோம் தற்போதும் அதே நடந்துள்ளது.