சிவாராத்திரி திருவிழா ஆங்காங்கே கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இரவில் கண் விழித்து பக்தர்கள் வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.
ஒருசில இடங்களில் பணத்தை அள்ளிக் கொடுத்துவிட்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர் பக்தர்கள். ஆனால் பல இடங்களில் சிவன் ஆலயங்களில் எந்த கட்டணமும் இன்றி தரிசனம் செய்து வருகிறார்கள்.
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மனமுண்டா? என்று சிவனுக்கும் – தலைமைப் பவலர் நக்கீரருக்கும் தர்க்கம் நடந்த இடமான புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அறியப்படுகிறது. அதனால் தான் நக்கீரமங்கலம் மெய்நின்றநாதர் ஆலயம் என்ற பெயர் உள்ளது. சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி எழுப்பிய ஆலயத்திற்கு மீண்டும் 2016 ம் ஆண்டு தான் குடமுழுக்கு நடத்தப்பட்டது.
சிவனுக்கும் – நக்கீரருக்கும் தர்க்கம் நடந்து மெய்யின் பக்கம் சிவன் நின்றதால் தான் மெய்நின்ற நாதர் என்ற பெயருடன் ஆலயம் அமைந்துள்ளது. அதனால் கோயில் முன்பு உள்ள தடாகத்தில் சிவனுக்கு 81 அடி உயரத்தில் சிவன் சிலையும், முன்னால் ஏழேகால் அடி உயரத்தில் புலவர் நக்கீரருக்கு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒவ்வொரு சிவராத்திரி அன்றும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும் சிவ பக்தர்கள், பொதுமக்கள் லட்சக் கணக்கில் கூடி வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.
இன்று சிவராத்திரி என்பதால் இன்று மாலை முதலே பக்தர்கள் கூடிவிட்டனர். வரும் பக்தர்களுக்காக கலை நிகழ்ச்சிகளுடன் இரவு முழுவதும் அன்னதான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுங்குடி கைலாசநாதர் ஆலயத்திலும் பக்தர்கள் கூட்டம் உள்ளது.