Published on 01/08/2018 | Edited on 01/08/2018
தனியார் மகளிர் விடுதியில் தங்கியிருந்த பெண்களிடம் பாலியல் பேரம் நடத்திய விவகாரத்தில் தலைமறைவாக இருந்துவந்த பெண் காப்பாளர் புனிதா கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கோவை பீளமேட்டில் தர்ஷனா மகளிர் தங்கும் விடுதி உள்ளது. இது ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமானது. இந்த விடுதியில் புனிதா என்பவர் வார்டனாகப் பணிபுரிகிறார். கல்லூரி மாணவியர், வேலைக்குச் செல்வோர் என 180-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் புனிதா, விடுதியில் தங்கியிருந்த 4 மாணவிகளை நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று விருந்து வைத்துள்ளார். அப்போது மது அருந்துவீர்களா என்று கேட்டுள்ளார். அப்போது அந்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், ஜெகநாதனுடன் உல்லாசமாக இருக்கும்படி மறைமுகமாக வலியுறுத்தினார்.
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவிகள் அந்த இடத்தில் இருந்து சாக்குபோக்கு சொல்லி வெளியேறியுள்ளனர். பின்னர் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். பெற்றோர்கள் உடனடியாக கோவை வந்து தங்களது மகள்களை கூட்டிச் சென்றுள்னர். இந்த விசயம் வெளியே தெரிந்தவுடன் மகளிர் அமைப்புகள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
புகாரின்பேரில் உரிமையாளர் ஜெகநாதன், புனிதா ஆகியோர் மீது பீளமேடு போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். பின்னர் உரிமையாளர் ஜெகநாதன் தலைமறைவானார். சில தினங்களுக்கு முன் நெல்லை மாவட்டத்தில் உள்ள கிணறு ஒன்றில் அவரது உடலை போலீசார் மீட்டனர். ஜெகநாதன் தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள பெண் காப்பாளர் புனிதா கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடந்த 10 நாளாக புனிதா தலைமைவாக இருந்தார். தற்போது முன்ஜாமின் நிலுவையில் உள்ள நிலையில் நீதிமன்றத்தில் புனிதா சரணடைந்தார்.