காவல்துறை மீது தவறான குற்றச்சாட்டுகளை வைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நடிகர் இளவரசுவிற்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடிகரும் ஒளிப்பதிவாளருமான இளவரசு, ஒளிப்பதிவாளர் சங்க முன்னாள் ஊழியர்களுக்கு எதிரான நிதி முறைகேடு புகார் குறித்து போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை எனப் புகார் ஒன்றைத் தெரிவித்திருந்தார். மேலும் போலீசாருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி டிசம்பர் 12க்குள் காவல்துறை விசாரிக்கவில்லை என நடிகர் இளவரசு தெரிவித்திருந்தார்.
டிசம்பர் 13 ஆம் தேதி காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தேன். ஆனால் டிசம்பர் 12 ஆம் தேதி நான் ஆஜரானதாக காவல்துறை தெரிவித்துள்ளது என இளவரசு தெரிவித்திருந்தார். இந்நிலையில் 'நீதிமன்றத்தில் பொய் சொல்ல வேண்டாம். டிசம்பர் 12 ஆம் தேதி நீங்கள் காவல் நிலையத்தில் ஆஜர் ஆனதற்கான ஆதாரங்கள் உள்ளன. காவல்துறையின் மீது தவறான குற்றச்சாட்டை சுமத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என அவரை நீதிமன்றம் எச்சரித்துள்ளது.