சேலத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடித்த தகராறில் வாலிபர் கொல்லப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் அம்மாபேட்டை நதிமுல்லா மக்கான் தெருவைச் சேர்ந்தவர் அபுபக்கர் (23). வாகன டயர்களுக்கு பஞ்சர் ஒட்டும் கடையில் வேலை செய்து வந்தார். தீபாவளி நாளன்று (அக். 27) அம்மாபேட்டை வித்யாக நகர் 8வது குறுக்கு தெருவில் இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.
அந்த வழியாக, அபுபக்கரின் நண்பர் முகமது சபீர் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பட்டாசு அவர் மீது தெறித்து விழுந்தது. இதில் ஏற்பட்ட தகராறில், முகமது சபீர், செல்போன் மூலம் தகவல் அளித்து உதவிக்கு வருமாறு அபுபக்கரை அழைத்தார்.
அவரும் நண்பருக்காக பட்டாசு வெடித்த கும்பலுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட கைகலைப்பில் சிலர் அவர்கள் இருவரையும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அபுபக்கம் நிகழ்விடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர். அம்மாபேட்டை பெரிய கிணறு தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில், கொலை வழக்கு தொடர்பாக கதிர் என்கிற கதிரேசன் (25), கவுதம் (24), அஜித் என்கிற தீபக் (23), பால் மணி என்கிற மணிகண்டன் (19), பாலா என்கிற பாலகுமார் (19), மணிகண்டன் (23), பிரகாஷ் (20) ஆகிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்களில் பாலா என்கிற பாலகுமார், கல்லூரி மாணவர். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.