கரோனா ஊரடங்கு காலமான கடந்த 5 மாதங்களாக கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டன. கோயில்களுக்கு பக்தர்கள் வருகை எண்ணிக்கை குறைந்திருந்தது. மக்களின் நடமாட்டம் இல்லாததால் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் கடந்த 3 மாத காலமாக தொடர்ச்சியாக கோயில்களில் கோயில் உண்டியல்கள் உடைக்கப்படுவதுடன், கோயில் பொருட்களும் திருடப்பட்டன.
பெண்ணாடத்தில் உள்ள சிவசுப்பிரமணியர் கோயில், கலிக்கம்ப நாயனார் கோயில், செல்வ விநாயகர் கோயில், காமராஜர்தெரு விநாயகர் கோயில், மாளிகைகோட்டத்தில் 2 மாரியம்மன் கோயில்கள், செம்பேரி சாலையில் உள்ள அய்யனார் கோயில் மற்றும் மேற்கு ரத வீதியில் உள்ள வீற்றிருந்த பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த காணிக்கை பணத்தையும், கோயில் பொருட்களையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று கொண்டிருந்தனர். தொடர்ச்சியாக நடந்துவந்த கோயில்களிலான திருட்டு சம்பவங்களையடுத்து மக்களிடையே அதிருப்தி நிலவியது.
இந்த தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இதையடுத்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் உத்தரவின்பேரில், விருத்தாசலம் துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி, விருத்தாசலம் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில், தலைமைக் காவலர்கள் சௌமியன், செல்வக்குமார், சரவணன் முதல் நிலை காவலர் தினேஷ்குமார், காவலர்கள் செல்வகுமார், சத்தியகுமார் ஆகியோர்கள் அடங்கிய சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு கோயில்களின் உண்டியல்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க தீவிரப்படுத்தப்பட்டது.
கடந்த சில நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், பெண்ணாடம் புதிய பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இருவரையும் தீவிரமாக விசாரணை செய்ததில் அவர்கள் பெண்ணாடம் சோழன் நகரை சேர்ந்த அகிலன்(18), கதிர்(19), கார்த்திகேயன்(25), கார்த்திக்(18), சதீஷ்குமார்(19) ஆகியோர் பெண்ணாடம் மற்றும் விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி, ஆவினங்குடி, காடாம்புலியூர் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட சுமார் 15-க்கும் மேற்பட்ட கோயில்களின் உண்டியல்களை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இதில் முக்கிய குற்றவாளியான மூவர் தலைமறைவாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதன்பேரில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து இரண்டு பவுன் நகை, ரூ.15 ஆயிரம் பணம், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில் தலைமறைவாகவுள்ள முக்கிய குற்றவாளிகள் மூன்று பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தனிப்படை போலீசார் கோயில்களில் கொள்ளையடித்த திருட்டு கும்பலை பிடித்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.