ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இலக்கியன் கோட்டையில் பழனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார். எஸ்.பி. பாஸ்கரன் முன்னிலை வைத்தார். சிறப்பு விருந்தினராக உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் மேல்சட்டை, ஒளிரும் குச்சி மற்றும் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், ''கடந்த 2004- 2009-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நத்தம் முதல் பழனி வரை பக்தர்கள் நடந்து செல்வதற்கு தனிபாதை அமைக்கப்பட்டது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் வாகனத்தில் பெருக்கமுள்ள மாநிலமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இருக்கிறது. பழனி தைப்பூச திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. லக்கையன் கோட்டை முதல் காமலாபுரம் வரை நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டிற்குள் வெளி மாவட்டத்தில் இருந்து பழனிக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள், குளியல் அறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
பழனிக்கு வரும் பக்தர்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக அனைத்து சாலைகளையும் மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக ஏற்பட்ட காரணத்தினால் சாலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லும் போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என முடிவு செய்து, இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. வரும் ஆண்டுகளில் வாகனங்கள் மாற்று வழியில் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இந்தாண்டே ஒட்டன்சத்திரம் முதல் பழனி செல்ல வாகனங்களுக்கு மாற்று பாதை பயன்படுத்தப்பட்டு வருகிறது. காமாலபுரம் முதல் ஒட்டன்சத்திரம் வரை 4 வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் பக்தர்கள் பாதையாத்திரைக்கென தனி பாதையும் அமைக்கப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் சாலை பாதுகாப்பு விதி முறைகளை பின்பற்ற வேண்டும்'' என்றார்.