Skip to main content

“செந்தில் பாலாஜிக்கு சிறையில் எந்தச் சிறப்பு வசதியும் வழங்கவில்லை” - அமைச்சர் ரகுபதி

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

Senthilbalaji was not given any special facility in jail Minister Raghupathi

 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் உள்ளிட்ட இருவர்களைத் தவிர்த்து வேறு எந்தத் தலைவரின் சிலைகளையும் உருவப் படங்களையும் வைக்கக் கூடாது எனச் சென்னை நீதிமன்றப் பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்த உத்தரவிலிருந்து அம்பேத்கருக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. இதையடுத்து உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கங்கா பூர்வாலாவை, சட்டத்துறை  அமைச்சர் ரகுபதி நேற்று இரவு சந்தித்து நீதிமன்றங்களில் உள்ள அம்பேத்கர் படம் அகற்றப்படக்கூடாது என வலியுறுத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றம் ஏற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

 

இந்நிலையில் புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இது குறித்துப் பேசுகையில், “நேற்று இரவு 8 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியைச் சந்தித்துப் பேசினேன். சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் கடிதம் ஒன்றை அளித்தேன். அதற்கு அவர் நீதிமன்றங்களில் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை அகற்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை, தற்போதைய நடைமுறையே தொடரும் என்ற உத்தரவாதத்தை அரசுக்குத் தருகிறோம் எனக் கூறினார்.

 

எப்போதுமே ஆண்டுக்கு ஆண்டு விலைவாசி குறிப்பிட்ட சதவீதம் உயர்ந்து வருவது இயற்கை தான். ஆனால் திமுக ஆட்சியில் விலைவாசியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் சாதாரண மக்கள் பாதிக்கப்படாத அளவிற்கு விலைவாசியைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறோம். புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எந்தச் சிறப்பு வசதியும் வழங்கவில்லை. முதல் வகுப்புக் கைதிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் மட்டுமே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்