நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மின்சாரத்துறை அமைச்சருமான தங்கமணி, "கடந்த ஆட்சியிலேயே 2.38 லட்சம் டன் நிலக்கரியைக் காணவில்லை என கணக்கெடுத்தோம். நிலக்கரி தட்டுப்பாடு வந்தபோது ஆய்வு செய்த போதே நிலக்கரி குறைந்திருந்த விவகாரம் தெரிய வந்தது. நாங்கள் கண்டுபிடித்ததை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கடந்த அ.தி.மு.க. அரசைக் குறைக்கூற வேண்டும் என்பதற்காகவே செந்தில் பாலாஜி குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். எனக்கு மடியில் கனமில்லை; அதனால் வழியிலும் கனமில்லை. யாரு தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க நான் முழு மனதுடன் ஆதரிக்கிறேன்.
நிலக்கரி விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவையில் நேரம் தந்தால் விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன். மின் உற்பத்திக்காக வாங்கிய கடன் குறித்து நானும் விளக்கம் அளித்துள்ளேன். கடந்த ஆட்சி மீது அவப்பெயரை ஏற்படுத்தவே இதுப் போன்ற குற்றச்சாட்டைக் கூறுகிறார்கள்" எனத் தெரிவித்தார்.
2.38 லட்சம் டன் நிலக்கரி காணவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தெரிவித்திருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.