கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "ஆட்சி மாறியதும் முதல் கைது செந்தில் பாலாஜி தான்" எனப் பேசியிருந்தார். திமுக ஆட்சிக்கு வந்தது முதலே அக்கட்சியையும் அதன் முக்கிய தலைவர்களையும் கடுமையாக விமர்சித்துவரும் அண்ணாமலை, செந்தில் பாலாஜியை பலமுறை தாக்கி பேசியுள்ளார். அதற்கு செந்தில் பாலாஜியும் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறார். அந்தவகையில், கோவை டவுன்ஹால் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், “ஆட்சி மாறியதும் நீங்கள் முதலில் கைது செய்யப்படுவீர்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளாரே?” எனக் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, "சிலபேர் வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது. வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கறந்த பால் மடி புகாது. அதேபோல நீங்கள் சொன்னவரின் கனவு ஒருபோதும் பலிக்காது. நோட்டாவுடன் போட்டிப் போடுபவர்கள் அவர்கள். கோவையில் 100 வார்டுகளில் போட்டியிட்டனர். ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
இவ்வளவு வீர வசனம் பேசுபவர் அரவக்குறிச்சியில் ஏன் மண்ணைக் கவ்வினார். மக்கள் ஏன் விரட்டியடித்தார்கள். இப்போதும் கூட அவர்கள் என் மீது நடவடிக்கை எடுக்கலாமே. அரவக்குறிச்சியில் ஓட்டுக்கு ரூ.1,000 பணம் கொடுத்தனர். அந்தப் பணம் எங்கிருந்து வந்தது. ஐ.பி.எஸ் ஆபிஸராக இருந்தபோது சம்பளத்தில் சேர்த்து வைத்த பணமா? இல்லையென்றால் ஆட்டுக்குட்டி மேய்த்ததில் வந்த பணத்தையா கொடுத்தார். நேர்மையான அதிகாரி போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கினார். மக்களுக்கு சேவை செய்யவா வேலையை விட்டார்.
சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது என்னைத் தூக்கிப் போட்டு பல்லை உடைப்பேன் என்று அவர் கூறினார். இப்படித்தான் அவர் மக்கள் முன்பு பேசுவார். மக்கள் பணியாற்ற நினைப்பவர்கள் இப்படியா பேசுவார்கள். விளம்பரத்துக்கும் வேலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. நாங்கள் வேலையில் இருக்கிறோம். அவர் வெட்டி விளம்பரத்தில் இருக்கிறார். அவர் மட்ட ரகமான அரசியல்வாதி. உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது மாநில தேர்தல் ஆணையம். ஆனால் மத்திய தேர்தல் ஆணையத்துக்குப் பதிவு போட்டவர் அவர். படித்த முட்டாள்களில் அவர் நம்பர் 1 முட்டாள் அவர்.
எந்த காலத்திலும் அவர்கள் நினைப்பது நடக்காது. 143 டாலருக்கு நாங்கள் நிலக்கரி இறக்குமதி செய்துள்ளோம். இதுவே பாஜக ஆளும் மாநிலங்களில் எத்தனை டாலருக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. நிலக்கரி தட்டுப்பாடு இருந்தபோது கூட இங்கு தடை இல்லாத மின்சாரம் கொடுத்தோம். பாஜக ஆளும் குஜராத்தில் ஏன் தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டு அறிவித்தனர். தரம் தாழ்ந்து பேசும் அரசியல்வாதிக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாம். தமிழகத்தின் தொழில்துறை தலைநகராகக் கோவையை உருவாக்குவது தான் முதல்வரின் இலக்கு. அதை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.