தற்கொலை செய்வோம் என்று தங்கள் கட்சி எம்.பி நவநீதகிருஷ்ணன் பேசியது வரவேற்கத்தக்கது. 37 பேரும் தற்கொலை செய்தாவது மக்கள் பிரச்னையைத் தீர்க்கவும் என கோவை இளைஞர் ஒருவர் பொள்ளாச்சி எம்.பிக்கு அளித்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி நீர் பங்கீடை சுமுகமாக மேற்கொள்ள காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்த நிலையில், மத்திய அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.
முன்னதாக, கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வோம் என மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் கூறியிருந்தார். மேலும் தமிழகத்தில் தங்களை மக்கள் ராஜினாமா செய்துவிடுங்கள் என கூறவதாக பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவை சேர்ந்தவர் பெரியார் மணி, சமூக ஆர்வலரான இவர், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் மகேந்திரனுக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்துடன் எலி மருந்து பாக்கெட் ஒன்றையும் இணைத்து கொரியரில் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுள் ஒருவராக நான் வைக்கும் கோரிக்கை. தங்கள் கட்சி சார்பாக 37 எம்.பி-க்கள் இருந்தும் தமிழக விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கூட நடைமுறைப்படுத்த முடியவில்லை. ராஜினாமா செய்யாமல், தற்கொலை செய்வோம் என்று தங்கள் கட்சி எம்.பி நவநீதகிருஷ்ணன் பேசியது வரவேற்கத்தக்கது. 37 பேரும் தற்கொலை செய்தாவது மக்கள் பிரச்னையைத் தீர்க்கவும். உங்களுக்கு உதவும் நோக்கில் எலி மருந்து அனுப்புகிறேன் நன்றி. விவசாயம் வெல்லட்டும் என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.