அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசும் போது "நடைபெறவிருக்கிற பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை எங்களுக்கு வெற்றி உறுதியாகிவிட்டது முதல்வர் இதுவரை 34 பாராளுமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்துள்ளார் அனைத்து தொகுதிகளும் முதல்வரை மக்கள் மலர்ச்சியுடன் வரவேற்கின்றனர்.
மக்கள் ஆதரவும் எங்களுக்கு பெருகி உள்ளது. முதல்வரும் துணை முதல்வரும் ஒருங்கிணைந்து பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை செய்து வருகிறார்கள். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இரண்டாயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிவித்தார். அந்த திட்டம் ஒரு கோடி பேருக்கு வழங்கப்பட உள்ளது. சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 3 லட்சத்தி 431 கோடிக்கு அந்நிய முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தியாவில் இது போன்று எங்குமே நடைபெறவில்லை. வரும் ஜூன் மாதம் இறுதிக்குள் 28 லட்சம் மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்கப்படும்.
மேலும் 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மினி லேப்டாப்பும் வழங்கப்படும். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது உதாரணமாக வேளாண் சம்மந்தமான வாக்குறுதிகள் நதிகள் இணைப்பு இவற்றை கூறலாம். நடைபெற உள்ள இருபத்தி இரண்டு சட்டமன்ற இடைத் தேர்தலிலும் அ.தி.மு.க.உறுதியாக வெற்றி பெறும். எதிர்க் கட்சிகள் என்ன அரசியல் செய்தாலும் எடுபடப்போவதில்லை. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அருகே இருந்த தொண்டர்கள் ‘அண்ணே மகத்தான வெற்றி பெறுவோம்னு சொல்லுங்க’ என கூற 'ஏப்பா கிண்டல் பன்றீங்க' என பதில் கூறுவது போல் பார்வை பார்த்து விட்டு வண்டி ஏறி சென்றார் செங்கோட்டையன்.