Skip to main content

"ஆட்சியெல்லாம் பிடிக்க முடியாது; காரைக்குடி ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாம்!" -ரஜினி குறித்து செல்லூர் ராஜு

Published on 10/05/2018 | Edited on 11/05/2018

மதுரை மாநகராட்சியில் இருக்கும் மூன்றாவது, பத்தொன்பதாவது, இருபது மற்றும் இருபத்திரண்டாவது வார்டுகளில் 93 லட்சம் செலவில் சாலைகள் அமைக்கும் பணி இன்று தொடங்கியது. அந்த சாலைப்பணிகள் தொடக்கவிழாவில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு பத்திரிகையளர்களை சந்தித்தார்.

 

sellur raju

 

 

அப்போது பேசுகையில், "தென்னிந்திய நதிகளை இணைப்பதுதான் எனது ஆசை" என்று நேற்று காலா பட இசைவெளியீட்டு விழாவில் பேசினார் நடிகர் ரஜினி காந்த். ஏற்கனவே அவர் அரசியலுக்கு நான் வரப்போகிறேன் என்று சொன்னவுடனேயே அரசியல் வட்டாரங்களில் பிரச்சனைகள் சூடுபிடிக்க ஆரம்பித்தது. ஆளுங்கட்சியினரான அதிமுகவை சேர்ந்தவர்கள் அனைவரும் அவரை விமர்சித்து வந்தனர். 

தற்போது நதிகளை இணைப்பதாக ரஜினி கூறியதை அடுத்து செல்லூர் ராஜுவிடம் அதை பற்றிய உங்களது கருத்து என்ன என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் முன் வைத்தனர். அதற்கு அவர், " ரஜினியின் கருத்து நல்லதுதான். அவர் ஆறுகளை இணைப்பது நல்லது தான். அதற்கு நிதி தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார், அதை முதலில் கொடுக்கட்டும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆசையும் தென்னிந்திய நதிகளை இணைப்பதுதானே? அதில் அவருடைய கருத்தும் ஒன்று, அவ்வளவுதான். அதில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று பத்திரிகையாளர்களை நோக்கி கேட்டார்.
 

 

sellur raju

 

 

'அதை வைத்துதான் ரஜினி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க போவதாக சொல்கிறார்கள்' என்றவுடன், ராஜு சட்டென்று, "தமிழ்நாட்டில் ஆட்சி எல்லாம் பிடிக்க முடியாது. வேண்டுமானால் காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம்" என்று கூறி கேலியாக சிரித்தார்.

 

 


அடுத்து, "தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது என்றால் அது மக்கள் கையில் தான் உள்ளது. யாரும் இந்த காலத்தில் அப்படியெல்லாம் சொல்ல முடியாது. மக்கள்தான் இக்காலத்தில் எஜமானர்கள். அவர்கள்தான் எல்லாம். மக்கள்தான் ஜனநாயகத்தின் இறுதி காவலர்கள். மக்கள் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களால்தான் ஆட்சியை பிடிக்க முடியும். எல்லோராலும் எம்.ஜி.ஆராக முடியாது.
 

 

sellur raju

 

தமிழக வரலாற்றில் முப்பத்தி இரண்டு வருடங்கள் கழித்து ஆட்சி செய்த கட்சியையே மீண்டும் வாக்களித்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் சாதாரணமான விஷயமல்ல. அம்மா கொடுத்த அற்புதமான திட்டங்கள், இந்திய அரசாங்கத்தில் ஒரு மாநில அரசு, அடிப்படை தேவைகளுக்காக இவ்வளவு திட்டமிட்டு அதற்காக பணிகளை எந்தவொரு முதலமைச்சரும் வகுத்திருப்பதாக தெரியவில்லை. அதனால்தான் தமிழகத்தில் மீண்டும் அதிமுகவிற்கு அச்சாரமான வாய்ப்பை மக்கள் தந்திருக்கிறார்கள். அரசியல் ஜாம்பவான்களாக இந்திரா காந்தி இருந்தபொழுதும், டாக்டர் கலைஞர் இருந்தபொழுதும் கூட எம்.ஜி.ஆர் மூன்று முறை ஆட்சி பொறுப்பில் மக்களுக்காக அமர்ந்திருக்கிறார். இத்தனைக்கும் இந்த இரு ஜாம்பவான்களும் கூட்டணி வைத்திருந்தபோதும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை, தமிழக மக்கள் எம்.ஜி.ஆர் இருக்கும் வரை அவர்தான் என்று சொன்னார்கள். தற்போது அம்மாதான் என்கிறார்கள். அவரும் ஆறு முறை ஆட்சியில் அமர்ந்தார்" என்றார்.

 

 


அதனால்தான் தமிழகத்தில் நிலவும் நீட், காவிரி மேலாண்மை வாரியம், விவசாயம், ஸ்டெர்லைட்,உள்ளாட்சி தேர்தல் போன்ற அத்தனை பிரச்சனைகளையும் விட்டுவிட்டு அம்மாவுக்கு பீனிக்ஸ் வடிவிலான நினைவு மண்டபம் காட்டுகிறார்களோ என்னவோ.   

 

         

சார்ந்த செய்திகள்