மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை சேமிப்பைச் சேமித்து வைத்துக்கொள்ளும் இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பது மிக மிக மோசமான செயல், ஆபத்தமான முடிவு என்கிறார் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு. மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ள எல்ஐசி பங்கு விற்பனை மற்றும் எல்ஐசி சட்டத்திருத்தத்தை எதிர்த்தும், நாடாளுமன்றத்தில் அதனைத் தடுத்து நிறுத்தக் கோரியும் திருவாரூரில் காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசுவிடம் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்டவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஏழை எளிய மக்களை வஞ்சிப்பது மட்டுமல்லாமல் நிராகரிக்கும் செயலில் அமைந்துள்ளது. பொருளாதார நடவடிக்கையில் இந்த அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அந்நிய மூலதன நிறுவனத்தின் கட்டளையை நிறைவேற்றும் ஒரு கருவியாகவே செயல்படுகிறது. கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 74% அந்நிய மூலதனத்தைத் திணிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும், அதற்கான சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பது கோடான கோடி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
ரயில்வே துறை, ஏர் இந்தியா, ஐடிபிஐ வங்கி மட்டுமல்லாமல் மேலும் இரு வங்கிகளைத் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்திருக்கும் செயல் மோசமானது. மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை சேமிப்பைச் சேமித்து வைத்துக்கொள்ளும் இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பது மிக மிக மோசமான செயல்," என்றார்.