தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகளில் தற்போது கண்ணாடி பாட்டில்களில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் எல்லா வகையான மதுவும் கண்ணாடி பாட்டில்களில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு மதுப் பிரியர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கண்ணாடி பாட்டிலுக்குப் பதிலாக பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை செய்ய இருப்பதாகத் தகவல் வெளியானது.
இதனையடுத்து அவ்வாறு அரசுக்குத் திட்டமிருந்தால் அதனை அனுமதிக்கக்கூடாது என்று கூறி பொதுநல வழக்கானது உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக அரசின் முடிவு என்ன என்று கேட்டது. இதற்கு விளக்கமளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், "தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை செய்யும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. அவ்வாறு விற்க முயன்றால் பாட்டில்களைச் சுத்தம் செய்யும் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். அதையும் தாண்டி சுற்றுச்சூழல் மாசு அதிக அளவில் ஏற்படக் காரணமாக அமையும். எனவே அரசிடம் அத்தகைய திட்டம் ஏதுமில்லை" என்றார்.