சேலத்தில் பார்மலின் ரசாயனம் கலந்த 130 கிலோ மீன்கள் மற்றும் 5 கிலோ கெட்டுப்போன மீன் இறைச்சியை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.
சேலம் சூரமங்கலம் மீன் இறைச்சி சந்தையில் புதன்கிழமை (மே 3), மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் சிவலிங்கம், புஷ்பராஜ், மீன் வளத்துறை ஆய்வாளர் கலைவாணி ஆகியோர் 14 மீன் கடைகளில் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, இரண்டு கடைகளில் மீன் இறைச்சி அழுகிப் போகாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் பார்மலின் என்ற ரசாயன திரவம் கலந்த 130 கிலோ மீன் இறைச்சி மற்றும் 5 கிலோ கெட்டுப்போன மீன் இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர்.
பார்மலின் கலக்கப்பட்டு உள்ளதா என்பதைக் கண்டறிய பயன்படுத்தப்படும் உபகரணம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. ஒருமுறை ஐஸ் பெட்டியில் இருந்து வெளியே எடுத்த மீன் இறைச்சியை மீண்டும் ஐஸ் பெட்டியில் வைத்து விற்பனை செய்யக்கூடாது; கெட்டுப்போன மீன்களை ஒருபோதும் விற்பனை செய்யக்கூடாது. விதிகளை மீறி செயல்படுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் எச்சரித்தனர்.