Skip to main content

“வீட்டு வாடகைக்கு பணம் கொடுக்கவே கஷ்டப்படுகிறேன்” - சீமான்

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

  Seeman struggling to pay the house rent

 

ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பிரதமரால் நாட்டில் ஏற்பட்ட இழப்புகளை எப்படி நாம் சரி செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்றார். தந்தாரா?. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான மனநிலையை மக்களிடம் உருவாக்க வேண்டும். அதை இந்தியா கூட்டணி செய்தால் நான் மனதாக வரவேற்கிறேன்.

 

இந்திய அரசின் தலைமை தணிக்கையாளர் அறிக்கை வந்துள்ளது. இன்று ஊழலைப் பற்றி பேசுகிறார்கள். ஊழலைப் பற்றி பேசுபவர்கள் அனைவருமே தூய்மையானவர்கள் அல்ல. நாட்டின் வளம் கொள்ளையடிக்கப்படுகிறது. பாழ்படுத்தப்பட்டுள்ளது. இதை எப்படி சரி செய்ய முடியும். அதேபோன்று திமுக 80 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறுகிறது. நிறைவேற்றிய 8 சதவீத வாக்குறுதிகளையாவது அவர்கள் கூறட்டும். காலை உணவு, மதிய உணவு, பெண்களுக்கு ஆயிரம் என்று மக்களை கையேந்த வைத்தது தான் இந்த அரசின் சாதனையாகும். தேர்தலின் போது அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் தருவதாக கூறினார்கள். இப்போது தகுதி வாய்ந்த பெண்களுக்கு என்கிறார்கள். எங்கள் பெண்களின் தகுதியை நிர்ணயிப்பதற்கு இவர்கள் யார்? மூன்று மந்திரிகளின் ஊழல் குற்றச்சாட்டை தானாக எடுத்து விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கருத்தை வரவேற்கிறேன். இன்று தமிழகத்தில் துப்புரவு தொழிலாளிகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் போராடுகிறார்கள். தனிநபர் வருமானம் உயர்ந்து விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் நானே வீட்டு வாடகை செலுத்த கஷ்டப்படுகிறேன். கர்நாடகாவில் திமுகவின் கூட்டணி கட்சி காங்கிரஸ் ஆளுகிறது. காவிரியில் தண்ணீர் தர அந்த அரசு மறுக்கிறது. கூட்டணியை விட்டு திமுக வெளியேற வேண்டியது தானே. தமிழகத்தில் நிலக்கரி வளம் நெய்வேலியில் சுரண்டப்படுகிறது.

 

இது குறித்து நீதிபதி தண்டபாணி கவலை தெரிவித்ததை வரவேற்கிறேன். அதிலிருந்து தயாரிக்கும் இலவச மின்சாரத்தை விவசாயிகளுக்கு வழங்குகிறார்கள். ஆனால் நிலத்தை விவசாயிகளிடம் இருந்து பறிக்கிறார்கள். சூரிய ஒளி காற்றாலை நீர் மின்சக்தி போன்ற இயற்கை வளங்களால் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். ஆனால் அதை தனியார் மயமாக்குகிறார்கள். அதானியின் சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கு முதலீடு 4500 கோடி. இதை செய்ய தமிழக அரசுக்கு நிதி இல்லையா? இப்போது எங்கு சென்றாலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என்ற கேள்வி எழுகிறது. கஞ்சா போதை பொருட்கள் நடமாட்டம், மது அதிகரித்துவிட்டது. 

 

விஜயலட்சுமியின் புகாரில் உண்மை இருந்தால் போலீஸ் விசாரணைக்கு எடுத்திருப்பார்கள் அதைப் பற்றி பேசுவது கேவலம் என நினைக்கிறேன். என்னை நம்பி தமிழகத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி பேசுவது அக்குடும்பங்களையும் பாதிக்கும். எனக்கு மனைவி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவர் குற்றம் சாட்டுவதற்கு அரசியல் கூட காரணமாக இருக்கலாம். வரும் நாடாளுமன்ற தேர்தலில், ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். அவர் இங்கு போட்டியிடவில்லை எனில் நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன். சட்டமன்ற தேர்தலில் மட்டுமே போட்டியிடுவேன்.

 

நீட் தேர்வால் மருத்துவர்களின் தரம் உயருமா.? தகுதி இல்லாத 11, 12.ம் வகுப்பு எதற்கு.?. அதனை நீக்கி விடலாமே. மோடிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ஏற்கனவே உள்ள மருத்துவர்களை தவிர்த்து நீட் படித்து வந்த மருத்துவர்களை தேடி பிடித்து வைத்தியம் பார்க்க செல்வாரா.? சனாதனம் பேசும் ஆளுநர், ராஜ்பவன் மாளிகையில் இருக்க வேண்டிய நபர் அல்ல. அவர் பைத்தியகார மருத்துவமனையில் இருக்க வேண்டியவர். அமலாக்கத்துறை பழிவாங்கும் நோக்கில் சோதனை நடத்துகிறது. திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் செயல்படுகிறது. ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான அதிமுகவின் அப்போதைய அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது திட்டமிட்டு திமுக அமைச்சர் வீடுகளில் சோதனை நடத்தப்படுவது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையாகத் தெரிகிறது” என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்