Skip to main content

சகித்துக் கொள்ள முடியாது - எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சீமான் கடும் கண்டனம்

Published on 22/05/2018 | Edited on 22/05/2018
STERLITE

 

 


அறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தி, தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு என்று கண்டனம் தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். மேலும், மக்கள் போராட்டத்திற்கு தீர்வு காண முடியாத தமிழக அரசு தனது அதிகாரத்தின் மூலமாக இவ்வாறு மக்கள் மீது வன்முறையை காட்டுமிராண்டித்தனமானது. சகித்துக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

ஸ்டர்லைட் ஆலையை மூடக்கோரி அறவழியில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் மீது தடியடி நடத்தி பின்பு துப்பாக்கி சூடும் நடத்தியதில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் பலியாகியிருப்பதாக வரும் செய்தி சொல்லொண்ணா துயரத்தையும் ஆத்திரத்தையும் வரவழைக்கிறது.
 

தூத்துக்குடி பகுதி மக்களின் உடல்நலனுக்கும் அப்பகுதி நிலத்தின் சுற்றுப்புற சூழலுக்கும் பெரும் கேட்டினை பிழைத்து வருகிற ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் பல்வேறு கட்டங்களாக போராடி வருகிறார்கள். கடந்த நூறு நாட்களாக தொடர்ச்சியான போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வரும் சூழலில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இடுகின்ற போராட்டத்தை அறிவித்து இருந்தார்கள். மக்களின் போராட்டத்தை தனது அதிகார பலம் கொண்டு அடக்கி விடலாம் என்ற தனது சர்வாதிகார மனப்பாங்கு மூலம் நினைத்திருந்த எடப்பாடி பழனிச்சாமி அரசிற்கு தனது ஒற்றுமையான கடுமையான போராட்டத்தின் மூலமாக அம்மக்கள் தக்க பதிலடி கொடுத்து இருக்கிறார்கள். மக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள வக்கற்ற தமிழக அரசும் அதன் காவல்துறையும் சனநாயக முறையில் போராடிய மக்கள் மீது கடும் வன்முறையை ஏவி நான்கு உயிர்களை கொலை செய்திருக்கிறது. இன்னும் பலர் உயிருக்கு ஆபத்தான சூழலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வருகின்ற செய்திகள் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கொதி நிலைக்கு உள்ளாகி இருக்கிறது. இன்று நடந்த உயிர் அந்த உயிர் பணிகளுக்கும் அங்கு காயம்பட்டவர்களின் அவல நிலைகளுக்கும் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

 

 

மக்கள் போராட்டத்தை தனது அரசதிகாரம் கொண்டு அடக்கி ஒடுக்கி விடலாம் என்கின்ற தமிழக அரசின் சர்வாதிகார மனநிலைக்கு தமிழக மக்கள் தங்களது போராட்ட பதிலடியால் தக்க மறுமொழி அளிப்பார்கள். மத்தியிலே ஆண்டு கொண்டிருக்கிற மோடி அரசுக்கு பினாமி அரசாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி அரசு தனியார் நிறுவனமான ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு தனது விசுவாசத்தை காட்டுவதற்காக இன்று நான் உயிரை காவு வாங்கி இருப்பது எதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது .தமிழகத்திலேயே பல்வேறு காரணங்களுக்காக தொடர்ச்சியாக தன்னெழுச்சியாக நடந்து வரும் மக்கள் போராட்டங்களை காவல்துறையை வைத்து அடக்க நினைப்பதும் பொய் வழக்குகள் போட்டு தக்க நினைப்பதும் தமிழக அரசின் பாசிச குண இயல்புகளை காட்டுகிறது. எந்த மக்கள் போராட்டத்திற்கு தீர்வு காண முடியாத தமிழக அரசு தனது அதிகாரத்தின் மூலமாக இவ்வாறு மக்கள் மீது வன்முறையை காட்டுமிராண்டித்தனமானது. சகித்துக் கொள்ள முடியாது.
 

தமிழக அரசின் சர்வாதிகார இந் நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சி தனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.