மரபுவழி விதைகளை மீட்டெடுத்து மக்களிடம் கொண்டு செல்வதற்காகவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும் செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம் மற்றும் தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரபுவழி வேளாண்மை விதை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
உழவர்கள் தற்சார்பு பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெற்ற இந்த விதை திருவிழாவில், கருப்புக்கவுனி, கார்குறுவை, கிச்சலிசம்பா, மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி போன்ற மரபு ரக நெல் ரகங்கள், தானியங்கள், நாட்டு ரக காய்கறி விதைகள், சிறுதானியங்கள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட வலி நிவாரணிகள், கைவினைப் பொருட்கள், துணி பைகள் பயன்பாடு மற்றும் விவசாயிகள் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு கிராமங்களிலும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய ரகங்களை மீட்டெடுத்தும், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைச் சந்தைப்படுத்தும் விதமாகவும் இந்த விதைத் திருவிழா நடைபெற்றது.
முன்னதாக தேவார பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் திருமுதுகுன்றத்தின் சிறப்புகளைக் கூறும் தேவாரப் பாடல்களைப் பாடி பொருள் கூறினர். அதனைத் தொடர்ந்து பெண்ணாடம் திருவள்ளுவர் கலைக் குழுவினரின் பறை இசை தப்பாட்டத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்க தலைவர் முருகன்குடி முருகன் தலைமை தாங்கினார். செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம் ஒருங்கிணைப்பாளர் கோட்டேரி சிவக்குமார் வரவேற்புரையாற்றினார். விருத்தாசலம் வட்டாட்சியர் ம.தனபதி தொடக்க உரையாற்றினார். தெலுங்கானாவைச் சேர்ந்த வேளாண் அறிவியலாளர் இராமாஞ்சநேயலு, தமிழ்த்தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். எழுத்தாளர் கண்மணி குணசேகரன், கவிஞர் மா.ஆ.தாமு, மரம் கருணாநிதி, தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு திருப்பூர் பிரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மு.பாண்டியன், மரபுவழி உழவர் காரைக்கால் பாஸ்கர், இயற்கை வேளாண் வல்லுநர் நாட்ராயன், மரம் பரமானந்தம் மற்றும் இயற்கை வழி வேளாண் ஆர்வலர்கள், இயற்கை விவசாயிகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன், இயற்கை வழி வேளாண்மை குறித்த விளக்க உரை ஆற்றினர்.
ஒவ்வொரு விவசாயிகளும் விவசாயத்தில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய விதை திருவிழாவில் தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுபா.இளவரசன், தமிழ்நாடு மேல்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் வே.மணிவாசகம், நஞ்சில்லா விதை கூட்டமைப்பு இளையராஜா மற்றும் இயற்கை ஆர்வலர்கள், இயற்கை விவசாயிகள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான விதைகள், உணவு பொருட்களை வாங்கினர். நூற்றுக்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், இயற்கை விவசாயிகள் தாங்கள் விளைவித்த இயற்கைவழி உணவு பொருட்களையும் விதைகளையும் காட்சிப்படுத்தி இருந்தனர்.