அயோத்தி தீர்ப்பு வெளியானதையொட்டி கடலூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தலைமையில் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் உள்ள காவலர்கள் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், தமிழ்நாடு ஊர்க்காவல் படையினர், தனிப்பிரிவு காவலர்கள் என அனைவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக சிதம்பரம் நடராஜர் கோயில், இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் பரங்கிப்பேட்டை, லால்பேட்டை பூதகேணி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடலூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியன் மற்றும் சிதம்பரம் உட்கோட்ட காவல் துறை துணைகண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆய்வாளர் முருகேசன் தலைமையில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக இருந்தது.