சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு ரூ 7500, மாநில அரசு ரூ5000 வழங்கக்கோரியும். சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கடனுதவி வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, கீரை ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் தமிமுன் அன்சாரி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், கொடுமையான கரோனா தொற்று வந்துள்ள நிலையில் மத்திய அரசு நேரடியாக நிவாரணம் வழங்க மறுக்கிறது. இதனை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி வருகிறோம்.
மத்திய அரசு ரூ 7500 மாநில அரசு ரூ 5000 ஆறு மாத காலத்திற்கு வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். கரோனா இந்த மாதத்துடன் முடிகிற காரியமில்லை. ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மாதந்தோறும் மத்திய அரசு ரூ 7500 வழங்கவில்லை என்றால் பட்டினி சாவுகள் அதிகரிக்கும்.
தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னையில் உள்ள மக்கள் மிகவும் ஆபத்தான நிலையை அடைந்துள்ளனர். ஒரு நாளைக்கு 22 பேர் உயிரிழந்து வருகிறார்கள். மாநில அரசு தொற்றை கட்டுப்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக ஏதோ அறிக்கை விட்டுக்கொண்டு எல்லாம் நல்லா இருப்பதாக கூறிவருகிறார்கள்.
தனியார் மருத்துவமனைகள் அனைத்தையும் கையகப்படுத்தி தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவம் அளிக்க வேண்டும் என இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியது. ஆனால் அரசு 25 சதமான தொற்று பாதித்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறியது. ஆனால் ஒருவர்கூட சேர்த்ததாக வரலாறு இல்லை. மக்களே தங்களை பாதுகாத்துக் கொண்டால் போதும் என்ற நிலைமைக்கு அரசு கைகழுவிவிட்டு உள்ளது.
இது மிகப்பெரிய ஆபத்தாக முடியும் வரும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் அதிகமான பேர் பாதிக்கப்படும் சூழ்நிலையில் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு செய்யவில்லை என்றால் மக்கள் மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாமல் சாலைகளில் செத்துக் கிடக்கும் நிலைமை ஏற்படும். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவர்கள், காவல்துறையினர், ஊடகத்தினர், தூய்மைப் பணியாளர்கள் அர்ப்பணிப்போடு பணி செய்து வருகிறார்கள். அவர்களுக்கு அதிக பொருளாதார பலன் உதவிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கையை கூட அரசு நிறைவேற்றவில்லை.
அதேபோல் அரசு மருத்துவமனைகளில் 8500 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தற்காலிக ஊழியர்களாக உள்ளனர் அவர்களின் பணியிடங்களை நிரந்தரம் செய்யவில்லை. வரும் செப்டம்பர் மாதத்தில் 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என அரசு நீதிமன்றத்தில் கூறுகிறது. அப்படி 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டால் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் என்னவென்று சொல்லவில்லை. ஏதோ போகிற போக்கில் சொல்வதுபோல் சொல்கிறார்கள். மத்திய அரசு கரோனாவிற்கு சிறப்பு நிதி தமிழகத்திற்கு வழங்கவில்லை, கொடுக்க வேண்டிய நிதியும் கொடுக்கவில்லை. இப்படி நிதி கொடுக்கவில்லை என்றால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு மாநில அரசு எப்படி செயல் முடிய செயல்பட முடியும்? மாநில அரசுடன் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மாநில அரசுக்கு தர வேண்டிய நிதியை தர வேண்டு என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி தமிழகத்தின் 1,500 மையங்களில் போராட்டம் நடத்தி வருகிறோம்'' என்று கூறினார்.